இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்:  தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 4:20 AM GMT (Updated: 6 Dec 2018 8:18 AM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சென்னை, 

இன்று (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சாலையில் நீண்டநேரமாக அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால், அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story