நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த வனிதா போலீசாருடன் வாக்குவாதம்


நடிகர் விஜயகுமார் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த வனிதா போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 7:11 PM GMT)

நடிகர் விஜயகுமாரின் வீட்டுக்குள் மீண்டும் அவருடைய மகள் வனிதா நுழைந்தார். இதையறிந்து அங்கு வந்த போலீசாருடன், தான் கோர்ட்டு உத்தரவுபடி வந்து உள்ளதாக கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பூந்தமல்லி, 

சென்னை ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர் 19-வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் விஜயகுமாரின் மகள் வனிதா, இந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறி வாடகைக்கு எடுத்து இருந்தார். ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகும் அவர் அந்த வீட்டை காலி செய்யவில்லை. இதுபற்றி மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நடிகர் விஜயகுமார் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதாக வனிதாவின் நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வனிதா, முன்ஜாமீன் பெற்றார். இந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

வீட்டுக்குள் நுழைந்தார்

இதற்கிடையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் நேற்று காலை தனது மகள் மற்றும் வக்கீல்களுடன் மதுரவாயலில் உள்ள விஜயகுமாரின் வீட்டுக்கு வந்த வனிதா, உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த காவலாளிகள் கதவை திறக்கவில்லை.

இதனால் வீட்டின் பின்புறம் உள்ள வாசல் கதவு வழியாக உள்ளே சென்ற அவர், அங்கு பணியில் இருந்த 2 காவலாளிகளையும் வெளியேற்றி விட்டு, மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும்போது எதற்காக வீட்டுக்குள் வந்தீர்கள்? என போலீசார் கேட்டனர். அதற்கு வனிதா, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடியே தான் இந்த வீட்டுக்குள் வந்து உள்ளதாக கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் இருந்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலையும் போலீசாரிடம் காண்பித்தார். இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். இது சம்பந்தமாக கோர்ட்டு உத்தரவு நகலை பேனராக அந்த வீட்டின் முன்பு வனிதா வைத்திருந்தார்.

இது குறித்து நிருபர்களிடம் வனிதா, கூறியதாவது:-

இடையூறு செய்யக்கூடாது

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தாயாரின் பெயரில் உள்ள இந்த வீட்டைவிட்டு நான் போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். நான் நடித்து சம்பாதிக்கும்போது வாங்கிய வீடு இது. நான் உள்பட என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் இந்த வீட்டில் பங்கு உண்டு.

நான் நியாயம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அங்கு எனக்கு உரிமையான இந்த வீட்டில் நான் இருப்பதற்கு யாரும் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என்றும், தேவைப்பட்டால் போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நகல்களை போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளேன். போலீசார் எனக்கு உரிய பாதுகாதுப்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story