மாநில செய்திகள்

குட்கா ஊழல் வழக்கு:அமைச்சரின் உதவியாளருக்கு சி.பி.ஐ. ‘சம்மன்’விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக உத்தரவு + "||" + Gudka scam case: CBI Sammon

குட்கா ஊழல் வழக்கு:அமைச்சரின் உதவியாளருக்கு சி.பி.ஐ. ‘சம்மன்’விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக உத்தரவு

குட்கா ஊழல் வழக்கு:அமைச்சரின் உதவியாளருக்கு சி.பி.ஐ. ‘சம்மன்’விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக உத்தரவு
குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு அமைச்சரின் உதவியாளருக்கு சி.பி.ஐ. ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
சென்னை,

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள். இருவரிடமும் தலா 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

குட்கா ஊழல் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டுள்ளனர். அடுத்த கட்ட விசாரணையை அவர்கள் தொடங்கி உள்ளனர்.

உதவியாளருக்கு சம்மன்

விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மனை ஏற்று சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.