300 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு தொடங்கியது


300 இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 6 Dec 2018 8:30 PM GMT (Updated: 6 Dec 2018 8:05 PM GMT)

வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு நேற்று தொடங்கியது. 9-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.

சென்னை,

300 வனவர், 878 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த காலியிடங்களுக்கான இணையவழி தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.

அதன்படி, இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 583 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான இணையவழி தேர்வு நேற்று தொடங்கியது. முதலில் வனவர் பதவிக்கான இணையவழி தேர்வு ஆரம்பித்து இருக்கிறது.

ஒரு பதவிக்கு 369 பேர் போட்டி

வனவர் பதவிக்கான இணையவழி தேர்வை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 782 பேர் எழுதுகிறார்கள். இவர்களை 4 தொகுதிகளாக பிரித்து 4 நாட்கள் தேர்வு நடக்கிறது.

நேற்று தொடங்கிய வனவர் பதவிக்கான இணையவழி தேர்வில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பொது அறிவு தேர்வும், பிற்பகல் 3 முதல் 6 மணி வரை பொது அறிவியல் தேர்வும் நடந்தது. ஒவ்வொரு தேர்வு தாளும் 150 வினாக்களை கொண்டது. தமிழகத்தில் 139 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. 300 பதவிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 782 பேர் விண்ணப்பித்து, தேர்வு எழுத உள்ள நிலையில், ஒரு பதவிக்கு 369 பேர் போட்டியிடுகின்றனர்.

வனக்காப்பாளர்

வனவர் தேர்வை தொடர்ந்து, வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான இணையவழி தேர்வு வருகிற 10, 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் காலியாக உள்ள 878 பதவிகளுக்கு 98 ஆயிரத்து 801 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். அதாவது ஒரு பதவிக்கு 112 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் 122 தேர்வு மையங்களில் நடக்கிறது.

Next Story