மாநில செய்திகள்

அம்பேத்கர் நினைவுநாள்:அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி + "||" + Ambedkar Memorial Day: Political party leaders are tribute

அம்பேத்கர் நினைவுநாள்:அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

அம்பேத்கர் நினைவுநாள்:அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய சிலை, உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கரின் சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உடன் இருந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோடம்பாக்கம் பவர் ஹவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமூக நீதி மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர்தாசன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொல்.திருமாவளவன்

தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உடன் இருந்தார்.

சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், விடுதலை விரும்பிகள் கட்சி சார்பில் செங்கோடன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முத்தரசன், ஜி.கே.வாசன்

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் கீழ் அவருடைய உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.

அதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஸ்ரீரங்கன்பிரகாஷ், தமிழக தலித் கட்சி சார்பில் டி.டி.கே.தலித்குடிமகன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி சார்பில் சசிகுமார் அஞ்சலி செலுத்தினார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோடம்பாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சாஸ்திரிபவன்

சென்னை சாஸ்திரிபவனில் அம்பேத்கரின் படத்துக்கு பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் ஏ.மாரியப்பன், மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் யுதிஸ்தர் நாயக் உள்பட மத்திய அரசு பணியாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பெரம்பூர் ரெயில் நிலையத்தின் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தென் இந்திய பொது நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரனும், அம்பேத்கர் முன்னணி கழகம், சென்னை துறைமுக எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீராமலு ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.