மாநில செய்திகள்

நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடகாவின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும்சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் பேச்சு + "||" + Congress leader talks on assembly

நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடகாவின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும்சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் பேச்சு

நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடகாவின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும்சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் பேச்சு
நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடகாவின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார்.
சென்னை,

சட்டசபையில் அரசின் தனி தீர்மானத்தை ஆதரித்து சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ஒற்றுமையாக இருந்தால் தான்...

கே.ஆர்.ராமசாமி:- காவிரி பிரச்சினை 40 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடக அரசின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும். மேகதாது பிரச்சினையில் தமிழக அரசு இவ்வளவு தாமதமாக நடவடிக்கை எடுப்பது ஏன்? மேகதாது அணை கட்ட ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. அந்த அணை கட்ட இவ்வளவு தொகை தேவையில்லை.

இதை வைத்து பார்க்கும்போது, கர்நாடக அரசு ஒரு அணையை கட்டுகிறதா? அல்லது 2 அணையை கட்டுகிறதா? என்ற சந்தேகம் எனக்கும் வருகிறது. இதை தமிழக அரசு ஆராய வேண்டும். கர்நாடக அரசிடம் ஏமாந்துவிடக்கூடாது. நீங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்தநிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு இருக்காது. இனியாவது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் வரும்போது அதை செய்வோம்.

சட்ட நடவடிக்கை

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-நீங்கள் (காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு) இருந்தபோது ஏன் செய்யவில்லை. நீங்கள் எதையும் பெற்றுத்தரவில்லை. நீங்கள் இப்படி பேசினால் நாங்கள் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக நடத்திய சட்ட போராட்டங்களை விரிவாக எடுத்துச்சொல்ல வேண்டிவரும்.

(இதைத்தொடர்ந்து கே.ஆர்.ராமசாமி, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் பேசிய பேச்சுகளும், அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த விளக்கமும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது).

கே.ஆர்.ராமசாமி:- தமிழகத்தை பலிகடா ஆக்கி, கர்நாடகவில் அரசியல் செய்ய மத்திய பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது. (அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது).

கே.ஆர்.ராமசாமி:- நான் உங்களை (அ.தி.மு.க.) சொல்லவில்லை. பா.ஜ.க.வை தான் சொல்கிறேன். அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அரசின் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இருந்தாலும் உங்களின் கோபப்பார்வை அதிகமாக இருக்க வேண்டும். சட்டரீதியான நடவடிக்கை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நாடாளுமன்றம் முற்றுகை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் பேசும்போது, ‘நாம் ஏற்கனவே தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். எனவே நம்முடைய தீர்மானத்திற்கு வலு இல்லையோ என்று பொதுமக்கள் நினைக்கும் நிலையில் இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் இந்த பிரச்சினை தொடர்பாக முற்றுகையில் ஈடுபட வேண்டும்’ என்றார்.

தமிமுன் அன்சாரி பேசும்போது, ‘பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அவ்வப்போது அணை கட்டுவதாக மிரட்டும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு கொடுப்பதுபோல, தமிழர்களின் விஷயத்தில் செயல்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் வலுவுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

தனியரசு பேசும்போது, ‘ஜெயலலிதா காவிரிக்காக பல உரிமைகளை நமக்கு பெற்றுக்கொடுத்தார். தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார். சுயேச்சை உறுப்பினர் டி.டி.வி.தினகரன், ‘அரசின் தனித்தீர்மானத்தை வரவேற்கிறேன்’ என்று ஒரே வார்த்தையில் உரையை முடித்துக்கொண்டார்.

நிறைவாக பேசிய சபாநாயகர் தனபால், தன்னுடைய உணர்வையும் இந்த தீர்மானத்தில் பதிவு செய்வதாக தெரிவித்தார்.