மத்திய அரசை எதிர்த்து துணிவோடு போராட வேண்டும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு


மத்திய அரசை எதிர்த்து துணிவோடு போராட வேண்டும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:45 PM GMT (Updated: 6 Dec 2018 8:19 PM GMT)

எக்காரணம் கொண்டும் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும், மத்திய அரசை எதிர்த்து துணிவோடு போராட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கஜா புயல் பாதிப்பு

மு.க.ஸ்டாலின்:- தமிழகத்தின் வாழ்வாதார, உயிராதார பிரச்சினையாக இன்றைக்கு நாமெல்லாம் இங்கே பேரவையில் கூடி அமர்ந்திருக்கிறோம். ஏற்கனவே, கஜா புயல் டெல்டா மாவட்டங்களின் பூகோளத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. அந்த புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவினால் பல லட்சம் விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்து, எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறி பரவியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் (குறுக்கிட்டு):- இன்றைய தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் பேச வேண்டும். அதிலிருந்து வெளியே வேண்டாம். அவ்வாறு பேசினால் நாங்களும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். தீர்மானத்தையும் வலுவிழக்க செய்யும்.

சபாநாயகர் ப.தனபால்:- தீர்மானத்தை ஒட்டி எதிர்க் கட்சி தலைவர் பேச வேண்டும்.

(மீண்டும் மு.க.ஸ்டாலின் கஜா புயல் பாதிப்பு குறித்து பேச முயன்றார். அதற்கும் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பதில் அளித்தார்)

மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசியதாவது:-

இறுதி தீர்ப்புக்கு எதிரானது

கஜா புயல் தாக்குதலில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டேன். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இதற்கு முன்பு இருமுறை நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். தி.மு.க. மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் 55 பேர் தமக்கிடையே உள்ள கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து 27-3-2015 அன்று பிரதமரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று நேரடியாகவே வலியுறுத்தியிருக்கிறோம்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகளும், தமிழக மக்களும் அதிர்ச்சியடையும் வகையில் தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்திருக்கிறது. காவிரி ஆற்றை தடுத்து மேலும் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்துக்கு அனுமதி கொடுத்திருப்பது நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கு எதிரானது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான மேல்முறையீடுகளை விசாரித்து 16-2-2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதி தீர்ப்புக்கும் எதிரானது. ஏன், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில், நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 1-6-2018 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட திட்டத்துக்கு எதிரானது.

தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக தமிழகத்தின் கருத்தைக்கூட கேட்காமல் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பது எதேச்சதிகாரமான போக்கு என்றே கருதுகிறேன். இந்த இடத்தில்தான் நாம் இரு முக்கியமான விஷயங்களில் கவனமாக இருக்கத் தவறிவிட்டோமோ என்ற சந்தேகம் என் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இன்றோடு 189 நாட்களாகிவிட்டது. அதாவது 6 மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றுவரை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவரை மத்திய அரசு நியமிக்கவில்லை, நியமிக்க ஆர்வமில்லை. காவிரி மேலாண்மை தலைவரும், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவரும் ஒரே அதிகாரி என்பதால் இன்றைக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை சந்தித்திருக்க வேண்டும்

இப்படியொரு ஆபத்தை நாம் ஏன் அனுமதித்தோம்? 5 வருட பதவி காலம் உள்ள முழுநேர தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நியமிப்பதற்கு கடந்த 6 மாதங்களாக தமிழக அரசோ, முதல்-அமைச்சரோ வலியுறுத்தாதது ஏன்? தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முழுநேர தலைவரை நியமிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? கர்நாடகம் இப்படி மேகதாது அணையை கட்டிக்கொள்ளட்டும் என்ற உள்நோக்கமோ என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழகத்தில் இருந்தும் ஒரு அனைத்து கட்சி குழுவினை அல்லது அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துக்கொண்டு சென்று பிரதமரை சந்தித்து இதை தடுத்திருக்க வேண்டும். மேகதாது அணை கட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளிக்கக்கூடாது என்று கூறியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக முதல்-மந்திரி சந்தித்து ஒரு மாதம் கழித்து, தாமதமாக அதாவது 8-10-2018 அன்றுதான் பிரதமரிடம் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கடிதம் கொடுத்திருக்கிறார்.

கஜா புயல் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. மத்திய அரசும் பேரிடர் நிதியை இன்னும் தரவில்லை. எனவே, கஜா புயல் நிவாரணப் பணிகள் பற்றி விவாதிப்பதற்கு நாளை (அதாவது இன்று) வரை சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபை கூட்டம் முடிந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசையும் கண்டித்து

நியாயமாக ஆணையத்தை கண்டிக்கிற நேரத்தில் மத்திய அரசையும் கண்டித்து அந்த தீர்மானம் இடம்பெற்றிருக்க வேண்டும். வேண்டுகோள் விடுக்கக்கூடிய வகையில் தான் தீர்மானம் அமைந்திருக்கிறது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களுக்கு முழுமையான நிவாரணம் போய்ச்சேரவில்லை. மத்திய அரசும், மாநில அரசு கேட்ட நிதியை தருவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. அதுகுறித்தும் விவாதிக்க அவையை நீட்டித்து இருக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை பேரவை தலைவரோ, அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story