மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்


மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
x
தினத்தந்தி 7 Dec 2018 12:15 AM GMT (Updated: 6 Dec 2018 8:27 PM GMT)

மத்திய அரசை கண்டித்து, தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

சென்னை, 

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

கடும் எதிர்ப்பு

இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்து உள்ளது.

ஏற்கனவே காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்காததால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்து இருப்பதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

சட்டசபையில் தீர்மானம்

இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்வதற்காக தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும், அவை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, “சட்டமன்ற பேரவை விதி எண் 33-ஐ தளர்த்தி இப்பேரவையில் இன்று அரசினர் அலுவலை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி

நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்கு பின்னர் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் கிடைக்கும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்த நேரத்தில், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடகத்தில் உள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு 22-11-2018 அன்று அனுமதி வழங்கிய செயல், நம் அனைவரையும் மிகவும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகின்றோம். இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் வகையில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, நம் உணர்வையும், எதிர்ப்பையும், கண்டனத்தையும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக் கும் விதமாகவும் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை, அவையில் நான் முன்மொழிய விழைகிறேன். இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்து அதனை ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கடும் கண்டனம்

இம்மாமன்றத்தில், 5-12-2014, 27-3-2015 ஆகிய நாட்களில், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள குழுமம் 22-11-2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற அக்குழுமத்துக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் இம்மாமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

உத்தரவிடவேண்டும்

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகத்தில் உள்ள காவிரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஒரு அணையா?, 2 அணைகளா?

அவர் பேசி முடித்ததும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

துரைமுருகன்:- முதல்- அமைச்சர் பேசும்போது, ஏற்கனவே 5-12-2014, 27-3-2015 ஆகிய தேதிகளில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். 5-12-2014 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், காவிரியின் குறுக்கே 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதாக கூறப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் 2 அணைகள் என்று தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இன்று புதிய அணை கட்டக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கர்நாடக அரசு கட்டுவது ஒரு அணையா?, 2 அணைகளா?. ஏனென்றால், அணை கட்டுவதற்காக ரூ.5,600 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை மேகதாதுவில் கட்ட முடியாது. இதைத் தாண்டி வேறு இடத்திலும் அணை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதா?. கிருஷ்ணராஜசாகர் அணை முதல் மேற்கு தொடர்ச்சி மலை இடையே எந்த அணையும் கட்டக்கூடாது என்று தீர்மானம் போட வேண்டும்.

கட்டக்கூடாது

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- அப்போது கர்நாடக அரசு 2 அணைகளை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. நாம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. நமக்கு இப்போதைய பிரச்சினை மேகதாது தான். நீர்வள சட்டத்திலேயே எந்த அணைகளும் கட்டக் கூடாது என்று விதி உள்ளது. அப்படி இருக்கும்போது, எப்படி சுற்றுச்சூழல் துறையும், நீர்வள குழுமமும் அனுமதி அளிக்க முடியும்? எந்த அணை, எத்தனை அணை கட்டினாலும் அது சட்டத்துக்கு புறம்பானது.

துரைமுருகன்:- அணை கட்ட ரூ.5,600 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்:- மேகதாதுவில் மட்டும் தான் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நமது கொள்கை என்னவென்றால், காவிரியின் குறுக்கே எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என்பதுதான். மேகதாது உள்பட எந்த அணையும் நமது (தமிழகம்) அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது.

மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இவ்வாறு நடந்த விவாதத்தை தொடர்ந்து, தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

எதிர்க்கட்சியாக தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையான காவிரியில் தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த ஒத்துழைப்பை ஆளும் கட்சி கூடுதல் பலமாக எடுத்துக் கொண்டு எக்காரணம் கொண்டும் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று துணிவோடு போராட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இருமுறை இதே மாமன்றத்தில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் போட்டுவிட்டோம். அதை அவர்கள் மதிக்கவில்லை. தமிழக உரிமைகளை மதிக்க முன்வரவில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருக்கிறது. ஆகவே, இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிற தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும். இருந்தாலும் தமிழக நலன் கருதி இந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் பதில்

அவரை தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.

அவர்களை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார்.

இந்த விவாதம் மாலை 5.35 மணி வரை நீடித்தது.

ஒருமனதாக நிறைவேறியது

அதைத்தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால், “முதல்- அமைச்சரின் தனித் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது” என்று கூறி குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

அதன்பிறகு, தேதி குறிப்பிடாமல் சட்டசபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அந்த நிகழ்வோடு சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.

Next Story