எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2018 9:00 PM GMT (Updated: 8 Dec 2018 7:47 PM GMT)

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அசோக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஒவ்வொரு ஆண்டும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கப்படவேண்டும். ஆனால், இந்த கல்வி உதவித் தொகை கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, மத்திய சமூக நீதி மற்றும் பாதுகாப்புத்துறை, தமிழக அரசு மூலம் இந்த உதவி தொகையை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசுக்கு கடிதம்

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கல்வி உதவித் தொகை ரூ.1,546 கோடியை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்காமல் உள்ளது. அந்த தொகையை கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது’ என்று கூறினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் மத்திய சமூக நீதி துறை கோரிக்கை விடுத்துள்ளது’ என்றார்.

வழங்க வேண்டும்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்படும் நிதி, மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை கிடைக்காமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டுக்கான நிதி ரூ.822.91 கோடியையும், 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான நிதி ரூ.162 கோடியையும் மத்திய சமூக நீதி மற்றும் பாதுகாப்புத்துறை 2 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இந்த உதவித்தொகையை மாணவர்களுக்கு தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story