கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 1,008 குடும்பங்களுக்கு ஆடுகள் கவிஞர் வைரமுத்து வழங்கினார்


கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 1,008 குடும்பங்களுக்கு ஆடுகள் கவிஞர் வைரமுத்து வழங்கினார்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:00 PM GMT (Updated: 8 Dec 2018 8:00 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 1,008 குடும்பங்களுக்கு ஆடுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

தஞ்சாவூர், 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் பசுமாடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. 3-வது கட்டமாக தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, நாகை பகுதிகளை சேர்ந்த 1,008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.

கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை தஞ்சை வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணி, கலப்பை மக்கள் இயக்கத்தின் வி.கே.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட 1,008 குடும்பங்களுக்கு பயன்படுமாறு ஆடுகள் வழங்கி இருக்கிறோம். ஒரு விவசாயி வீட்டில் ஆடு, மாடுகள் என்பவை ரேஷன் கார்டில் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்கள்.

ஒரு பசுமாடு, ஒரு ஆடு, ஒரு முருங்கை மரம் ஒரு வெட்டரிவாள் 50 டன் அரிசி-5,000 வார்த்தைகள் இவ்வளவோடு ஒரு விவசாயியின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. இவை எல்லாவற்றையும் இழந்துவிட்டால் கிராமத்து மக்களுக்கு ஏது வாழ்க்கை?

நம்பிக்கையை இழக்காதீர்கள்

புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் வேளாண் குடும்பத்து பெருமக்களே, எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள். சமுதாயத்தில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களில் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.

கஜா புயலை கணக்கெடுக்க வந்த மத்திய குழுவினர் கால்களில் விழுந்து சில பேர் கண்ணீர் விட்டார்கள். யாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை. கேட்பது உங்கள் உரிமை, கொடுப்பது அவர்கள் கடமை. ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்பது எங்கள் எண்ணம். சுட்ட ஓட்டில் சொட்டு நீர் விழுந்தது மாதிரி இருக்கிறது இந்த சிறிய தொகை. இன்னும் பெருந்தொகை வழங்கப்பட வேண்டும்.

நிரந்தர தீர்வு

விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சமுதாயம் இரக்கத்திற்குரியது. இந்தியா முழுதும் விவசாயத்திற்கு மாற்றுத் தொழிலும் கண்டறியப்பட வேண்டும். மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன. இன்றைய தேவை சோறு, நாளைய தேவை அரிசி, எதிர்கால தேவை விதைநெல். இந்த மூன்றுக்கும் உத்தரவாதம் வழங்கப்படாவிட்டால் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

சொந்த ஊரில் பிறந்து படித்து ஊரை விட்டுப் போன இளைஞர்கள் தாய் கிராமத்திற்கு திரும்ப வரவேண்டும். குடும்பம், ஊர், உறவு ஆகிய மூன்றுக்கும் உதவி செய்ய வேண்டும்.

நிலங்களிலெல்லாம் தென்னை மரங்கள் பிணங்களாக விழுந்து கிடக்கின்றன. தென்னை மரத்திற்கு உயிருண்டு என்று நம்புவதால் அதை தென்னம்பிள்ளை என்று விவசாயி அழைத்தான். இழந்த மரங்கள் நடப்பட வேண்டும்.

இந்தியா முழுவதிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும் தேவையான தென்னங்கன்றுகளை வரவழைத்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவேண்டும். தென்னை மரங்கள் பலன்தரும் வரைக்கும் அரசு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story