மேகதாது அணையை எதிர்ப்பதாக நடிப்பது இரட்டை வேடம் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. நாளேடு பாய்ச்சல்


மேகதாது அணையை எதிர்ப்பதாக நடிப்பது இரட்டை வேடம் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. நாளேடு பாய்ச்சல்
x
தினத்தந்தி 8 Dec 2018 8:41 PM GMT (Updated: 8 Dec 2018 8:41 PM GMT)

மேகதாது அணையை எதிர்ப்பதாக நடிப்பது இரட்டை வேடம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வின் நாளேடான ‘நமது அம்மா’வில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வசைபாடி நேற்று முன்தினம் ‘குத்தீட்டி’ என்ற பெயரில் கட்டுரை ஒன்று வெளியா கியிருந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று தி.மு.க.வின் நாளேடான ‘முரசொலி’யில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது:-

தி.மு.க. விமர்சிக்காமல் இல்லை

‘காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது’ என்று ‘நமது அம்மா’ நாளிதழில் குத்துப்பட்ட ஈட்டி ஒன்று குதறி இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் - குமாரசாமி கூட்டாளியாம். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மேகதாதுவை எப்படி எதிர்க்கிறார்கள், காங்கிரசை சேர்த்துக் கொண்டு போராட்டம் நடத்துவது இரட்டை வேடம் என்கிறது, அந்த குத்துப்பட்ட ஈட்டி.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவு கொண்ட குமாரசாமி ஆட்சி இருந்தாலும், தமிழக காங்கிரஸ், தமிழக நலன் சார்ந்து தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டது. கூட்டணியில் இருக்கும் கட்சி என்பதற்காக கர்நாடக அரசை விமர்சிக்காமல் தி.மு.க. இல்லை.

முதுகெலும்பு இல்லாத அரசு

தமிழக சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் நீர்பாசனத்துக்கு அச்சுறுத்தலாக, தமிழர்களை நிர்க்கதியில் விட கர்நாடக மாநில அரசு மேகதாது அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது” என்றும், “சுப்ரீம் கோர்ட்டையே கேள்வி கேட்கும் மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுகிறது” என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட அனுமதி வழங்கியிருப்பது, மத்திய பா.ஜ.க. அரசு. அந்த மத்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் போட முதுகெலும்பு இல்லாத அரசு எடப்பாடி பழனிசாமி அரசு.

எத்தனையோ தீர்மானம்

கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுத் தடுக்க வேண்டிய மத்திய அரசிடம் போய், கெஞ்சல் தொனியில் தீர்மானம் எழுதிய எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக உரிமை பற்றிப் பேச உரிமை இருக்கிறதா?. மேகதாதுவுக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசைக் கண்டிக்காமலேயே, மேகதாது அணையை எதிர்ப்பதாக நடிப்பது இரட்டை வேடமா இல்லையா?.

கவுண்டமணி ஸ்டைலில், ‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்’ என்பதுதான் எடப்பாடி பழனிசாமி ஸ்டைல். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் படித்தால் புரியும். இப்படி எத்தனையோ தீர்மானம் போட்டுவிட்டார்கள். ‘நீட்’ தேர்வில் விலக்குகேட்டு, 7 பேர் விடுதலைக்காக, இப்போது மேகதாதுவை எதிர்த்து. இப்படித் தீர்மானம் போட்டு அனுப்புவதோடு கடமை முடிந்து விடுவதாக, எடப்பாடி பழனிசாமி போய்விடுவார்.

பாறை மீது பாய வேண்டாம்

‘கர்நாடக முதல்-மந்திரி கடந்த ஜூன் மாதம் மேகதாது கட்ட அனுமதி கேட்டார். 3 மாதம் கழித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

செப்டம்பர் மாதத்தில் மேகதாது அணை அனுமதிக்காக கர்நாடகம் மும்முரமானது. அப்போது எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை. பழைய மைதா மாவு சாக்கு மூட்டைகளைத் தைத்து தோற்றுப்போன இந்த குத்துப்பட்ட ஈட்டி, தி.மு.க. எனும் பாறை மீது பாய வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story