72–வது பிறந்த நாள் சோனியாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து


72–வது பிறந்த நாள் சோனியாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Dec 2018 9:45 PM GMT (Updated: 9 Dec 2018 8:07 PM GMT)

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி நேற்று தனது 72–வது பிறந்த நாளை கொண்டாடினார்.

சென்னை, 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி நேற்று தனது 72–வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன் அவர் ஒரு வாழ்த்து செய்தியும் வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:–

72–வது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு தி.மு.க. சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் கருணாநிதியின் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட அவர் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிக வலிமையான அடித்தளம் அமைத்தவர்.

மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக்குத் தூண்டுகோலாகவும், உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார்.

பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட சோனியாகாந்தி, நலமோடும், மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story