சென்னையில் நாளை நடக்கிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை


சென்னையில் நாளை நடக்கிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:00 PM GMT (Updated: 9 Dec 2018 9:08 PM GMT)

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தல் தேதியும், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

மேலும், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story