மாநில செய்திகள்

பள்ளிக்கூட கதவை உடைத்துஅரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள்போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் + "||" + School breaks the door Students who stole half yearly examination questions Shocking information at the police investigation

பள்ளிக்கூட கதவை உடைத்துஅரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள்போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பள்ளிக்கூட கதவை உடைத்துஅரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள்போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தேவகோட்டையில் பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டது தொடர்பாக 7 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
சிவகங்கை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதற்கான வினாத்தாள்கள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை தாலுகா முழுவதிலும் உள்ள 26 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுக்கு உரிய வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டு, ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டது. இந்த நிலையில் அந்த அறை கதவை உடைத்து, பல்வேறு பாடங்களுக்குரிய மொத்தம் 30 வினாத்தாள்கள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் அந்த மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள். அவர்கள் அனைவரும் தேவகோட்டை போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் சில அதிர்ச்சி தகவல்களை கூறினர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

சம்பவத்தன்று இரவில் பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து, அங்கிருந்த குழாய் வழியாக ஏறி அலுவலகத்தில் நுழைந்து, அங்கு தலைமையாசிரியர் அறைக்கான சாவியை எடுத்து சென்று திறந்துள்ளனர். ஆனால் வினாத்தாள்கள் இருந்த அறையின் சாவியை தலைமையாசிரியர் கொண்டு சென்றதால், அதன் கதவை உடைத்து உள்ளே புகுந்து 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கான வினாத்தாள்களை திருடிச் சென்றது, அந்த 7 மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட பள்ளிக் கூடத்தின் இரவு நேர காவலாளி சாப்பிட சென்ற நேரத்தில் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அந்த மாணவர்களிடமிருந்த வினாத்தாள்களை போலீசார் கைப்பற்றினர். நேற்று அரையாண்டு தேர்வு தொடங்கியதால், வினாத்தாள் திருட்டில் தொடர்புடைய 7 மாணவர்களும் தேர்வு எழுத பள்ளி நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, ‘7 மாணவர்களையும், வருகிற 17-ந் தேதிக்கு பின்பு பள்ளிக்கு வருமாறும், தற்போது தேர்வு எழுத அனுமதிக்க முடியாது“ என்றும் கூறி அனுப்பி வைத்தார். சிக்கியுள்ள 7 மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

யாருடைய தூண்டுதலின் பேரிலும், இந்த 7 மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் புகுந்து கதவை உடைத்து வினாத்தாள்களை திருடிச் சென்றார்களா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.