சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு ரத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கை 4 மாதங்களில் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு ரத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கை 4 மாதங்களில் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2018 9:30 PM GMT (Updated: 10 Dec 2018 7:58 PM GMT)

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், 4 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக வி.கே.சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது 1996-97-ம் ஆண்டுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா மீது காணொலி காட்சி மூலமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணங்களில் அவர் கையெழுத்திடவில்லை.

இதனால் மறுகுற்றச்சாட்டு பதிவுக்காக வி.கே.சசிகலாவை வருகிற 13-ந் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் அவசர வழக்காக நேற்று விசாரித்தார். அப்போது, சசிகலா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, ‘சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நீண்டதூரம் பயணம் செய்து கோர்ட்டில் ஆஜராக முடியாது. எனவே, அவரை நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வி.கே.சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று எழும்பூர் பொருளாதார கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். தேவைப்பட்டால் வழக்கு விசாரணைக்காக காணொலி காட்சி மூலம் அவரை ஆஜர்படுத்தலாம். மேலும், சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கை 4 மாதங்களுக்குள் எழும்பூர் கோர்ட்டு விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Next Story