மேகதாது திட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தாமதப்படுத்தி முட்டுக்கட்டை போடும் முயற்சி கர்நாடக மந்திரிக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்


மேகதாது திட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தாமதப்படுத்தி முட்டுக்கட்டை போடும் முயற்சி கர்நாடக மந்திரிக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:00 PM GMT (Updated: 10 Dec 2018 8:14 PM GMT)

மேகதாது திட்ட பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசை அழைத்தது, சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தாமதப்படுத்தி முட்டுக்கட்டை போடும் முயற்சி என்று கர்நாடக மந்திரிக்கு, தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகாவில் மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக நேரம் கேட்டு கடந்த 6-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதம் தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

மேகதாது திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை, கடந்த பிப்ரவரி 16-ந்தேதியிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறி மத்திய நீர்வள கமிஷனிடம் இருந்து கர்நாடகா அரசு பெற்றுள்ளது.

தமிழக அரசிடமோ அல்லது காவிரி நதி பாயும் மற்ற மாநிலங்களிடமோ இதற்கான ஒப்புதலை கர்நாடக அரசு பெறவில்லை. அதோடு, சுப்ரீம் கோர்ட்டினால் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் தகவல் அளிக்கவில்லை.

மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது, கடந்த நவம்பர் 30-ந்தேதி தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கையும், உங்களுக்கும் (கர்நாடகா மந்திரி டி.கே.சிவக்குமார்) மற்றும் சிலருக்கும் எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5-ந்தேதி தாக்கல் செய்து விசாரணை நிலுவையில் உள்ள வழக்கையும் தாமதப்படுத்தி முட்டுக்கட்டை போடும் முயற்சியாக உள்ளது.

எனவே தமிழக அரசின் முன்அனுமதியை பெறாமல், மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை எந்த வகையிலும் தொடரக்கூடாது என்றும், கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றுப்படுகையின் எந்தப்பகுதியிலும் கட்டுமானப்பணியை செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய நீர்த்தேக்கம் கட்டுவது அல்லது ஏதாவது வேறு திட்டத்துக்கான கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது பிப்ரவரி 16-ந்தேதியன்று சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

எனவே, மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை நீங்கள் நிறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உண்மையாகவே பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story