5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு: ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து


5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு: ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து
x
தினத்தந்தி 11 Dec 2018 10:48 PM GMT (Updated: 11 Dec 2018 10:48 PM GMT)

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை, 

5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நம்முடைய மிகப்பெரிய வெற்றிக்கு இது தொடக்கமாக அமையும் என்றார். மேலும், தன்னுடைய வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் சோனியாகாந்திக்கு தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

5 மாநில தேர்தல் முடிவு தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மாநில தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான நமது போருக்கும், பிரமாண்ட கூட்டணிக்கும் இந்த வெற்றி வலுசேர்க்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், மற்றொரு டுவிட்டர் பக்கத்தில், ‘‘2018–ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றி 2019–ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முன்னறிவிப்பாக வந்துள்ளது.

இந்தியா எங்கும் உள்ள மதசார்பற்ற சக்திகள் எவ்வித தயக்கமும் இன்றி காங்கிரஸ் தலைமையில் அணி திரண்டு பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சியை அகற்றிட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story