மாநில செய்திகள்

பதிவு செய்த ஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் + "||" + Registered documents immediately Access to e-mail

பதிவு செய்த ஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

பதிவு செய்த ஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
பதிவு செய்த ஆவணங்களை திரும்பப்பெற தாமதமாகும் நிலையில் அவற்றை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கான சேவையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்கு சென்று வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் பெறும் தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த வலைதள அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ், பதிவுத்துறையில் வீட்டில் இருந்தபடியே இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை இணையதளம் வழியாகவே செலுத்தி விரைவுக் குறியீடு (கியூஆர் கோடு) மற்றும் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் இலக்க சான்றொப்பமிட்ட வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகலை தரவிறக்கம் செய்து கொள்ளும் திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார்.

மேலும், அச்சான்றிதழில் அச்சிடப்பட்டிருக்கும் விரைவுக் குறியீட்டை ஒளிவருடல் செய்தால் சான்றிதழின் நகலை மையக் கணினியிலிருந்து பார்வையிடலாம். இம்முறையில் சான்றிதழின் உண்மைத்தன்மையை எவரும் அறிந்து கொள்ளலாம். இந்த சான்றிதழ்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் உள்ளது.

இந்த புதிய வசதியால், பொதுமக்கள் வில்லங்கச்சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள பதிவுத்துறைக்கான கட்டணங்களை 11 வங்கிகளின் இணையவழி மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக, இந்திய நிதியமைப்புக்குட்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனை முறைகளிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட புதிய இணையவழி கட்டணம் செலுத்தும் முறையையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார்.

இப்புதிய முறையினால் 58 வங்கிகளின் வழியே இணைய வங்கி சேவை (நெட் பாங்கிங்), பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மற்றும் ஒருங்கிணைந்த கட்டண முகப்பு (யுபிஐ பேமெண்ட்) ஆகிய அனைத்து வழிகளிலும் பதிவுத்துறைக்கான கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவுப் பணிகள் நிறைவடைந்து ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒளிவருடல் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணத்தை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு (இ–மெயில்) அனுப்பும் புதிய வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்புதிய வசதியினால் பொதுமக்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற்றுச் செல்ல தாமதமாகும் தருணங்களில் ஒளிவருடல் செய்யப்பட்டு தங்கள் மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட ஆவண பிம்பங்களை தங்களின் உடனடி தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், சீட்டுப் பதிவு மற்றும் சங்கப் பதிவுக்கான மென்பொருள் மேம்படுத்தப்பட்டு ஸ்டார் 2.0 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மை நிறுவனப் பதிவுக்கு புதிதாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இணையதளம் மூலம் விண்ணப்பித்து இலக்க சான்றொப்பமிட்ட அனைத்து நகல்களையும் இணைய வழியாக பெற்றுக்கொள்ளும் வசதி, பதிவுற்ற சீட்டுகள், சங்கங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, இந்து திருமணப்பதிவு சட்டம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், தனி திருமணப் பதிவுச் சட்டம், கிறிஸ்துவ திருமணப் பதிவுச் சட்டம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஸ்டார் 2.0 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இணையதளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து சான்றிதழ்களையும் இணைய வழியாக பெற்றுக்கொள்ளும் வசதி, பதிவுற்ற திருமணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்திற்கும் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என்று கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு 7–ந் தேதியன்று சட்டசபையில் அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்; காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை மற்றும் திருச்சி மாவட்டம் உறையூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட சார்பதிவாளர் புதிய அலுவலக கட்டிடங்களை முதல்–அமைச்சர் திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.