ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி


ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 13 Dec 2018 5:51 AM GMT (Updated: 13 Dec 2018 5:51 AM GMT)

ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

கரூர்:

2006, 2011 சட்டமன்ற தேர்தலில்களில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்த போது அவருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தார். பின்னர் 4½ ஆண்டுகளை கடந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. உடனே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். பின்னர் 2016 தேர்தலில் விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதி மாற்றி வழங்கப்பட்டது.

பணப்பட்டுவாடா விவகாரத்தில் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. இதற்கிடையே எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கினார்.

அதில் இருந்து இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லாமல் போய்விட்டது. வெளியில் கட்சி தலைமைக்கு பயந்து உறவாடினாலும் உள்ளுக்குள் எலியும், பூனையுமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடையவே செந்தில்பாலாஜி, சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் தீவிரமாக ஆதரிக்க தொடங்கினார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதனால் தனக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தார்.

கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் முதன்மை தளகர்த்தாவும் ஆன செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு தாவ முடிவெடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மவுனம் காத்த அவர், நேற்று ஒரு திருமண விழாவில் வைத்து, ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை தான் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைய இருப்பதாகவும், அதன் பின்னர் மு.க.ஸ்டாலினை கரூருக்கு வரவழைத்து அ.ம.மு.க.வினரை தி.மு.க.வில் இணைக்கும் பிரமாண்ட விழா நடைபெறும் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்ட பின்னர்தான் தி.மு.க.வுக்கு செல்ல செந்தில்பாலாஜி தீர்மானித்துள்ளார். ஆனால் தி.மு.க.வுக்கு தூது விடுவதற்கு முன்பே செந்தில்பாலாஜி அ.தி.மு.க. வுக்கு செல்ல தூது விட்டதாகவும், உரிய முக்கியத்துவம் தர தலைமை மறுத்ததால் தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டதாகவும் அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி தரப்பினர் இதனை திட்டவட்டமாக மறுத்தனர்.

அங்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருக்கும்போது தனக்கு முக்கியத்துவம் கிடைக்காது என தெரிந்தும் எப்படி அங்கு தூதுவிடுவார். அதற்கு வாய்ப்பே இல்லை. வேண்டும் என்றே புழுதி வாரி தூற்றுகிறார்கள் என்றனர்.

அண்ணன் தி.மு.க.வுக்கு செல்ல முடிவெடுத்தது அருமையானது. 5 மாநில தேர்தல்களில் மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீச தொடங்கிவிட்டது. மேலும் தி.மு.க-காங். கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் செந்தில்பாலாஜி அடுத்த தேர்தலில் அமைச்சராவது உறுதியாகிவிட்டது என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி ஒன்றாக நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியானது. எனவே செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைவது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டது.

செந்தில்பாலாஜி தி.மு.க. வில் இணைவதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பெரிதும் விரும்புகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட சறுக்கலே ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்கிறது. எதிர் வரும் காலங்களில் செந்தில் பாலாஜி போன்றவர்களால் இதனை சரிசெய்ய முடியும் என அவர் நம்புவதாக கூறப்படுகிறது.

செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு செல்ல முடிவுவெடுத்துள்ளது டி.டி.வி.தினகரனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆகவேதான் அவரை எப்படியாவது சமரசம் செய்ய வேண்டும் என முயற்சித்தார். செந்தில்பாலாஜியின் உறுதியான முடிவால் அது கானல் நீராகி போனது.

மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

Next Story