நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ‘அப்பா’ என்று அழைத்த உருக்கம்


நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ‘அப்பா’ என்று அழைத்த உருக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:30 PM GMT (Updated: 13 Dec 2018 8:12 PM GMT)

நாகை மாவட்டத்தில் சுனாமியில் உயிர்தப்பிய 2 பெண் குழந்தைகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சந்தித்தபோது ‘அப்பா’ என்று உருக்கமாக அழைத்தனர்.

நாகப்பட்டினம், 

2004-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்குதலை யாராலும், எப்போதும் மறக்க முடியாது. அதில் பலர் தங்கள் குடும்பம், உறவினர்கள், உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளித்து உதவிய கரங்கள் ஏராளம்.

நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து தவித்த 99 குழந்தைகளுக்கு ‘அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்’ தொடங்க அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போது அங்கு கலெக்டராக பணிபுரிந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் காப்பகத்தை தொடங்கி கவனித்து வந்தார். இந்த காப்பகத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்பட பலரும் வந்து பார்த்துள்ளனர்.

காப்பகத்தில் இருந்த 99 குழந்தைகளில் மீனா, சவுமியா முறையே 2 மற்றும் 3 வயது நிரம்பிய குழந்தைகள். இதில் மீனா கீச்சாங்குப்பம் பாலம் பகுதியிலும், சவுமியா வேளாங்கண்ணி ஆலயத்திலும் குடும்பத்தினர் அனைவரையும் சுனாமியால் இழந்து, தாங்கள் மட்டும் உயிர் தப்பி ஆதரவற்ற நிலையில் நின்றுகொண்டு இருந்தவர்கள். இவர்கள் மீது ராதாகிருஷ்ணன் அளப்பரிய பாசமும், கவனமும் செலுத்திவந்தார்.

டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்கு கலெக்டராக இருந்தபோது, பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த காப்பகத்துக்கு தான் செல்வதுமட்டுமில்லாமல், தன்னுடைய மனைவி கிருத்திகா, மகன் அரவிந்துடன் சென்று அங்கே தங்கியிருந்த குழந்தைகளுடன் பொழுதை செலவழித்து வந்தார்.

இதற்கு ஈடாக அங்கிருந்த குழந்தைகள் டாக்டர் ராதாகிருஷ்ணனை ‘அப்பா’ என்றும், அவருடைய மனைவி கிருத்திகாவை ‘அம்மா’ என்றும் பாசத்தோடு அழைத்து வந்தனர்.

இதற்கிடையில் பதவி உயர்வு கிடைத்து, நாகை மாவட்டத்தில் இருந்து சென்றாலும், 2010-ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் இந்த காப்பகத்துக்கு சென்று குழந்தைகளை சந்தித்து வருவதை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வழக்கமாக கொண்டு இருந்தனர். அதன் பிறகு பணிச்சுமையால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்கு சென்றிருந்தார். அப்போது நாகப்பட்டினம் ஊர் பொதுமக்களையும், அந்த காப்பகத்தில் தங்கி படித்து, திருமணம் முடித்த தமிழரசி விஜயபாலனையும் சந்திக்கும் வாய்ப்பு ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தது.

அப்போது பிஞ்சு குழந்தைகளாக காப்பகத்தில் சேர்ந்த மீனா மற்றும் சவுமியாவை பற்றி ராதாகிருஷ்ணன் விசாரித்தார். இவர்கள் 2 பேர் தான் காப்பகம் தொடங்கப்பட்டதில் இருந்து அங்கேயே தங்கி தற்போது வரை படித்து வருபவர்கள். மீனா அதே பகுதியில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவரை நேரடியாக பள்ளிக்கே சென்று டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ராதாகிருஷ்ணனை பார்த்ததும் மீனா ‘அப்பா’ என்று அன்போடு அழைத்ததை அங்கிருந்த ஆசிரியர்களும், சக ஊழியர்களும் பார்த்து நெகிழ்ந்துபோனார்கள். மீனாவை, ராதாகிருஷ்ணன் ‘மீனு’ என்று தான் அழைப்பார். அவளை பார்த்ததும் மீனு எப்படி இருக்கிறாய்? காப்பகத்துக்கு யாராவது உன்னை தேடி வந்தார்களா? என்று ராதாகிருஷ்ணன் கேட்டார்.

அதற்கு மீனா, ‘என்னைத் தேடி யாருமே வரவில்லை’ என்று சொன்னதும் ராதாகிருஷ்ணன் கண்கலங்கிவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், மீனாவிடம் நீ எதற்கும் கவலைப்படக்கூடாது. நன்றாக படிக்க வேண்டும் என்றார். மேலும், பிளஸ்-2 முடித்து, எந்த மேற்படிப்பை தேர்வு செய்யப்போகிறாய்? என்று பாசத்துடன் கேட்டார். அதற்கு மீனா, பி.காம் படிக்க விருப்பப்படுகிறேன் அப்பா என்றார். உடனே அதற்கான படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதேபோல், கல்லூரியில் படித்துவரும் சவுமியாவை செல்போனில் தொடர்புகொண்டு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது, விரைவில் நேரில் சந்திக்க வருவதாக கூறி நன்றாக படிக்க வேண்டும் என்று சவுமியாவுக்கு ஆலோசனை வழங்கினார்.

Next Story