போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்


போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 14 Dec 2018 6:13 AM GMT (Updated: 14 Dec 2018 6:13 AM GMT)

போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக இருந்த 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்கள்.

சென்னை

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 142 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தையும் ஆணையம் பதிவு செய்துள்ளது.

சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ளார். தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 20-ந் தேதி  காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் 18-ந் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியதை அடுத்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆணையத்தின் முன் ஆஜரானார்.

அவரை தொடர்ந்து போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பணிப்பெண்களாக பணியாற்றிய தஞ்சையை சேர்ந்த தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகிய 3 பேரும் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி உள்ளனர்.

Next Story