மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி


மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 14 Dec 2018 6:51 AM GMT (Updated: 14 Dec 2018 6:51 AM GMT)

மு.க ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை,

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன் அதில் ஐக்கியமானார். அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு பின்னர், செந்தில்பாலாஜியின் கருத்தை டி.டி.வி.தினகரன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதாவது, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்றும், தேர்தல் வந்தால் வேட்பாளர்களின் செலவுகளை கவனிப்பது குறித்தும் சில ஆலோசனைகளை செந்தில்பாலாஜி கேட்டபோது, அதை உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செந்தில்பாலாஜியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து புறக்கணிப்பு செய்யும் நடவடிக்கை தொடங்கியது. மேலும் பல மாவட்ட செயலாளர்களும் அவரை தொடர்பு கொண்டு பேசினர்.

இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் கரூரில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். மூன்று, மூன்று பேராக தனது அறைக்கு அழைத்து கருத்து கேட்டார். அப்போது, அவர் தி.மு.க.வில் சேருவது குறித்து தங்களது கருத்து என்ன? என்று அறிந்தார். அப்போது பலரும் தி.மு.க.வில் சேரலாம் என்றனர். ஆதரவாளர்கள் அனைவருமே தி.மு.க.வுக்கு செல்ல விரும்புவதால், செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர முடிவு செய்தார். 

திமுகவில் சேர்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் இன்று (14 ஆம் தேதி) செந்தில் பாலாஜி அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். 


Next Story