மாநில செய்திகள்

தொண்டர்களை அரவணைத்து செல்கிறார் ‘மத்திய அரசை வலிமையாக எதிர்க்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்’ தி.மு.க.வில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி + "||" + The federal government Strongly opposed leader MK Stalin After joining DMK Senthil Balaji interview

தொண்டர்களை அரவணைத்து செல்கிறார் ‘மத்திய அரசை வலிமையாக எதிர்க்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்’ தி.மு.க.வில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி

தொண்டர்களை அரவணைத்து செல்கிறார் ‘மத்திய அரசை வலிமையாக எதிர்க்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்’ தி.மு.க.வில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி
மத்திய அரசை வலிமையாக எதிர்க்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், அவர் தொண்டர்களை அரவணைத்து செல்கிறார் என்றும் தி.மு.க.வில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் நேற்று இணைந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொண்டர்களை அரவணைத்து செல்கின்ற சிறந்த தலைவராக மு.க.ஸ்டாலினை நான் பார்க்கிறேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் ஒரு (அ.ம.மு.க.) இயக்கத்தில் சேர்ந்து, செயல்பட்டு வந்தேன். தற்போது மு.க.ஸ்டாலின் தலைமை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்து கொண்டு இருக்கிறேன். கரூர் மாவட்ட மக்களின் எண்ணங்கள், விருப்பத்தின் அடிப்படையில் தி.மு.க. வில் இணைந்து உள்ளேன்.


எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சி தமிழ் மக்களின் நலனுக்கும், எண்ணங்களுக்கும் எதிராக உள்ளது. அவர்களால் தமிழகத்தின் உரிமைகளை மத்திய பா.ஜ.க. சூறையாடுகிறது. மத்திய அரசுக்கு அடி பணிந்து நம்முடைய உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது. தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சி அகற்றப்படும். தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். நான் சார்ந்து இருக்கிற கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும், ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். இதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கடுமையாக உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீட்டுக்கு செல்லாததால் இந்த முடிவா?

பதில்:-18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது, தேர்தலுக்கு செல்லலாம் என்று கூறினேன். மேல் முறையீட்டுக்கு சென்றால், அவர்களுக்கு (அ.தி.மு.க. அரசுக்கு) துணை போவது போல இருக்கும் என்று தெரிவித்தேன்.

கேள்வி:-உங்களை போல தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் தி.மு.க.வுக்கு வருவார்களா?

பதில்:-17 பேரிடம் நான் வாருங்கள் என்று அழைக்கவில்லை. அது அவர்கள் விருப்பம்.

கேள்வி:-பிரிந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைய வாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருந்தார்களே?

பதில்:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இப்போது அந்த இயக்கம் ஒரு மூழ்கும் கப்பல். அந்த கப்பலில் பயணிக்க தொண்டர்கள் தயாராக இல்லை. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர தான் மக்கள் வாக்களித்தார்கள். இவர்கள் ஆள்வதற்கு அல்ல. மு.க.ஸ்டாலின் தலைமை பண்பு என்னை ஈர்த்தது. தி.மு.க.வில் சேர முடிவு எடுத்ததால் அ.ம.மு.க.வில் இருந்து விலகி இருந்தேன்.

கேள்வி:-டி.டி.வி. தினகரன் வலிமை இழந்து விட்டாரா?

பதில்:-மத்திய அரசை வலிமையாக எதிர்க்க கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். என்னுடன் இருந்தவர்களை பற்றி கருத்து கூறுவது நல்ல பண்பாக இருக்காது.

கேள்வி:-உங்களை போல வேறு யாராவது தி.மு.க.வில் இணைய இருக்கிறார்களா?

பதில்:-அ.தி.மு.க., அ.ம.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் விரைவில் தி.மு.க.வில் இணைவார்கள். நான் பல முறை ஆலோசித்து தான் தி.மு.க.வில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.