ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:49 AM GMT (Updated: 15 Dec 2018 10:49 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

இந்த நிலையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதனையடுத்து,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார்.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறையினருடன் ஆலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story