பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: மாற்று பொருளாக எதை பயன்படுத்தலாம்? மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: மாற்று பொருளாக எதை பயன்படுத்தலாம்? மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 8:00 PM GMT (Updated: 15 Dec 2018 5:18 PM GMT)

ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மாற்று பொருட்களாக எவற்றை பயன்படுத்தலாம் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், ஒரு முறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், போக்குவரத்து செய்வதும் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

அதன்படி, உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் அல்லது பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்புகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மாகோல் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருந்தாலும்), பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் தூக்கு பைகள் (கேரி பேக்குகள்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன கப்புகள், மூங்கில், மண்பொருட்கள், மரச்சாமான்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித, துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், தானியங்களால் செய்யப்பட்ட தேக்கரண்டிகள் மற்றும் மண் குவளைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை கடைபிடித்து, ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வெற்றிக்கரமாக அமல்படுத்துவதற்கு பொதுமக்கள் உதவிபுரியவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story