ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர்: “உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” ஜெகத்ரட்சகன் புகழாரம்


ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர்: “உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” ஜெகத்ரட்சகன் புகழாரம்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:17 PM GMT (Updated: 15 Dec 2018 11:17 PM GMT)

ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர் என்றும், உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி என்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அவரை நினைவு கூர்ந்து முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி சூரியனோடு சொக்கட்டான் ஆடிய தலைவர். நெருஞ்சிக் காட்டில் இருந்த தமிழை குறிஞ்சிக்காட்டில் குடியமர்த்திய கோமான். வானவில்லின் ஏழு வண்ணம், வார்த்தைகளில் எழும் வண்ணம் ரசவாதம் செய்த தலைவர். தூரத்து மழை மேகத்தைத் தமிழ் தடாகத்துக்குக் கொண்டு வந்த தலைவர். எந்திரச் சொல்லாய் இருந்த தமிழனை மந்திரச் சொல்லாய் மாற்றிய பெருந்தகை. வீணையாய் கிடந்த தமிழனை, வில்லாய், அம்பாய் பிறப்பெடுக்கச் செய்தவர்.

பனை ஓலையில் படுத்துக்கிடந்த தமிழுக்கு பச்சை ரத்தம் பாய்ச்சியவர். சில பூக்கள் கொடியில் மலர்கின்றன. சில பூக்கள் செடியில் மலர்கின்றன. சில பூக்கள் மரத்தில் மலர்கின்றன. எட்டுக்கோடி தமிழர்களின் இதயங்களில் மலர்ந்த மலர்தான் நம் தலைவர் கருணாநிதி. கடைக்கோடித் தமிழனுக்கும், கடைமடைத் தமிழனுக்கும் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாய் மு.க.ஸ்டாலினை தந்து சென்ற தலைவர்.

உலகத்தின் 8-வது அதிசயம் தலைவர் கருணாநிதி. ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதிய ஒரே தலைவர் இவர். இலக்கியத்தில் யாரும் எட்டமுடியாத உச்சத்தை எட்டியவர். கோட்டைகள் எங்கே?. கொடி மரங்கள் எங்கே?. கோவில்கள் எங்கே? என்று தேடினாலும் கிடைப்பதில்லை. ஆனால், காலத்தின் வாள்வீச்சுக்குத் தப்பிநிற்பது இலக்கியம் மட்டும்தான் என்று பிரான்சு நாட்டு பேகன் சொன்னதை ஓசையிடாமல் உலகிற்கு உணர்த்தியவர் தலைவர் கருணாநிதி.

கோட்டையில் இருந்தாலும், கோபாலபுரத்தில் இருந்தாலும் தான் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவன் என்பதை உறக்கத்திலும் மறக்காத ஒரு உன்னத தலைவரின் கை வண்ணத்தையும், சொல் வண்ணத்தையும் காண்பதற்கும், கேட்பதற்கும் ஊர்ந்து ஊர்ந்து, தவழ்ந்து தவழ்ந்து, எழுந்து எழுந்து, விழுந்து விழுந்து, நடந்து நடந்து, ஓடி ஓடி அந்த அவரது மோகனத் தமிழையே மூச்சாக சுவாசித்துக்கொண்டு இருந்தவர்கள் நாங்கள். போலித்தனமில்லாமல் இந்த மண்ணை நேசித்த புதுமைத் தலைவர் அவர். அரிசி விலை தெரியாதவனுக்குக்கூட அரசியல் வலை வீசக் கற்றுத்தந்த அரசியல் ஞானியும் அவர்.

பொதியமும், இமயமும் உள்ளவரை, பொன்னியும், கங்கையும் ஓடும் வரை, மதியமும், ஞாயிறும் ஒளிரும் வரை, வாடையும் தென்றலும் வீசும் வரை, வண்ணத்தமிழ் நம் வாய்மொழியாய் இருக்கும் வரை கருணாநிதி புகழ் நிலைத்து நிற்கும்.

தலைவர் கருணாநிதி ஓர் சகாப்தம், ஒற்றைச் சொல்லில் சொல்ல வேண்டுமானால் மனித உருவில் இனமானம். ஒவ்வொரு நொடியின் போதும் சிந்தனையை உதிர்க்கும் கருத்துப் பேழை, வாடிய பயிரை வாழ்விக்கும் பெருமழை. நாளைய நூற்றாண்டின் நாட்காட்டி. இவை அனைத்தும் ஒன்றாய் திரண்ட மனித உருவம் தலைவர் கருணாநிதி.

தமிழனுக்கு இலக்கணம் தேவைப்பட்டது - தொல்காப்பியம் கிடைத்தது. வீரம் தேவைப்பட்டது - வல்வில் ஓரி கிடைத்தார். காதல் தேவைப்பட்டது - அம்பிகாபதி கிடைத்தார். பகுத்தறிவு தேவைப்பட்டது - பெரியார் கிடைத்தார். நேர்மை தேவைப்பட்டது - அண்ணா கிடைத்தார். கவிதை தேவைப்பட்டது - பாவேந்தர் பாரதிதாசன் கிடைத்தார். இத்தனையும் தனிதனியாய் இல்லாமல் மொத்தமாய் தேவைப்பட்டபோது - கருணாநிதி கிடைத்தார்.

அவரின் மறுபதிப்பாய் ஒரு நூற்றாண்டு திராவிட இயக்க வரலாற்றைக் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கும் தங்கத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளைய தமிழகத்துக்கு ஒளி கொடுப்போம். சொல்லாண்டு பாடி, சுவையாண்டு பாடி, பல்லாண்டு பாடி பாசத் தலைவரின் புகழ்பாடி அவர் வழி நடப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story