மாநில செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் ‘வருக, நல்லாட்சி தருக’ என்று முழக்கம் + "||" + At the opening ceremony of the Karunanidhi statue MK Stalin vulnerability Rahul Gandhi is the prime minister

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் ‘வருக, நல்லாட்சி தருக’ என்று முழக்கம்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் ‘வருக, நல்லாட்சி தருக’ என்று முழக்கம்
கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்” என்று சூளுரைத்தார்.
சென்னை,

நாட்டின் முது பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார். கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில், அவரது 8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது.


இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக சிலைக்கு அருகில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

சோனியாகாந்தி, தான் கையில் வைத்திருந்த ‘ரிமோட் கன்ட்ரோல்’ பொத்தானை அழுத்தியதும், சிலையை சுற்றி மறைக்கப்பட்டு இருந்த திரை விலகியது. கருணாநிதி சிலையை பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நாசர், விவேக், வடிவேலு, பாரதீய ஜனதா எம்.பி. நடிகர் சத்ருகன் சின்கா, இந்தியா சிமெண்ட் தலைவர் சீனிவாசன், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ராம்கோ சிமெண்ட் சேர்மன் வெங்கட்ராம ராஜா, டாக்டர்கள் மயில்வாகனன் நடராஜன், கோபால், எஸ்.எம்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூடியிருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர் களுக்கு எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி சிலையும் அதே நேரத்தில் திறக்கப்பட்டது.

சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் காரில் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு புறப்பட்டனர். முதலில், முன்பக்கம் உள்ள அண்ணா நினைவிடத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர், பின்பகுதியில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு நடந்து சென்று அங்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் வந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, அவர்கள் அனைவரும் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு சென்றனர்.

அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று சூளுரைத்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தபோது, எனக்கு ஒரு நினைவு வந்தது, 1961-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய நேரத்தில், மாநகராட்சி சார்பிலே ஜிம்கானா கிளப் அருகில் காமராஜர் சிலையை திறந்து வைத்தோம். சிலையை திறந்து வைத்தது அன்றைய பிரதமர் நேரு. இன்றைக்கு நேருவின் குடும்பத்தை சேர்ந்த சோனியாகாந்தி, நம்முடைய தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து இருக்கிறார். நான் மிகுந்த மகிழ்ச்சியில், பூரித்து போய் இருக்கிறேன். இது என்னுடைய வாழ்வில் முக்கியமான, மறக்கமுடியாத நாளாக அமைந்து இருக்கிறது.

நாள் முழுவதும் அண்ணா, அண்ணா என்று உருகிய தலைவருக்கு அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகிலேயே, கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியை நாம் இழந்து 128 நாட்கள் ஆகிறது. இன்றைக்கும் அவர் நம்மை இயக்குகிறார். அவர் மறையவில்லை என்ற உணர்வுதான் ஓடுகிறது.

எங்கோ மறைந்து நின்று இன்றைக்கு நம்மை வழி நடத்துகிறார் என்ற எண்ணம் தான் ஓடுகிறது. கருணாநிதி அவர்களே எங்கே இருக்கிறீர்கள். எனக்கு அக்காள்கள் இருக்கிறார்கள். அண்ணன் இல்லை, ஆனால் அண்ணனாக நான் கருதுவது அன்பழகனைத்தான் என்று சொல்வீர்களே? இன்றைக்கு அன்பழகன் முன்னிலையில் உங்கள் சிலை திறப்பு விழா நடந்து இருக்கிறதே? நீங்கள் எங்கே சென்று விட்டீர்கள். உங்களால் சொக்க தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட, சோனியாகாந்தி வந்து இருக்கிறார்? எங்கே போய் விட்டீர்கள்? என்னுடைய தந்தை போன்றவர் என்று சொன்ன சோனியாகாந்தி இருக்கிறார். எங்கே போய் விட்டீர்கள்? உங்களை போராட்ட குணம் படைத்த தலைவர் என்று சொன்ன ராகுல்காந்தி இங்கே வந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?

ஆந்திர மாநில முதல்-மந்திரி வந்திருக்கிறார். எங்கே போய் விட்டீர்கள்? உங்கள் சமூக நீதி கொள்கைகளை கேரளாவில் அமல்படுத்தும் பினராயி விஜயன் இருக்கிறார். எங்கே போய் விட்டீர்கள்? நாராயணசாமி உங்கள் ஆலோசனை பெற்றாரே அவர் வந்திருக்கிறார், நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்? நீங்கள் எங்கும் போக மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறீர்கள்.

இந்தியாவை காக்கும் ஜனநாயக போர்க்களத்திற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். வேறுபாடு இல்லாத, மாறுபாடுகள் இல்லாத, மதமாச்சரியங்கள் இல்லாத, சாதி மோதல்கள் இல்லாத, ரத்தக்களறி இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் இங்கே கூடி இருக்கிறோம். நரேந்திரமோடியால் மத நல்லிணக்கத்திற்கு கேடு ஏற்பட்டு உள்ளது. அதனால் மோடியை எதிர்க்கிறோம். இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. அதனால் எதிர்க்கிறோம். அவரால் சமூகநீதிக்கு, மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் எதிர்க்கிறோம்.

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது. இனியும் 5 ஆண்டுகள் ஆளவிட்டால், நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும். தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதமராக நினைக் காமல், ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்தும் பிரதமராக மோடி இருக்கிறார். தன்னை ஜனாதிபதியாக, சுப்ரீம் கோர்ட்டாக, சி.பி.ஐ.யாக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அனைத்துக் கட்சிகளும் அவருக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறோம். இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும், மக்களையும் காப்பாற்ற சேர்ந்து இருக்கிறோம்.

தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் போதெல்லாம் எத்தனையோ சாதனைகளை படைத்து இருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கல்வி, வேலைவாய்ப்புக்காக மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, சேது சமுத்திர திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1,650 கோடி ரூபாயில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ஏதாவது ஒரு சாதனையை பா.ஜ.க. அரசு செய்து உள்ளதா?.

தமிழகம் எதையெல்லாம் எதிர்க்குமோ? அதையெல்லாம் கொண்டு வந்து கொடூர எண்ணம் கொண்ட பிரதமராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கஜா புயலால் 65 பேர் இறந்தார்கள். 14 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்கப்பட்டது. விவசாயம் பழைய நிலைக்கு வர இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்திலோ, மராட்டியத்திலோ ஏற்பட்டு இருந்தால் போய் இருக்க மாட்டாரா?. தமிழ்நாடு என்பதால் இங்கே வரவில்லை. அவருக்கு பணிகள் அதிகம். வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். அவருக்கு நேரம் இல்லை. கவலை தெரிவித்தேன் என்று ஏதாவது செய்தி வெளியிட்டாரா?. இரங்கல் தெரிவித்தாரா?. அந்த அளவுக்கு தமிழ்நாடு பாவப்பட்டு போய் விட்டதா?.

அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தால் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கிறார். டெல்டா மாவட்டங்களில் இறந்து போனவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். இதைத்தான் கொடூர மனம் கொண்ட பிரதமர் நரேந்திரமோடி என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். தமிழர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?. அதனால்தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறோம். அவரை வீழ்த்துவதற்காகத்தான் 21 கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. இதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.

இந்த மேடையில் அமர்ந்திருக்கும் சோனியாகாந்திக்கு நான் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் ஒரே மாதிரியாக இருக்கக்கூடியவர் கருணாநிதி என்று இந்திராகாந்தி சொல்வார். அந்த கருணாநிதியின் மகனாக இருக்கும் நான் சொல்கிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் நானும் உறுதியாக இருக்க கூடியவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

1980-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக வர வேண்டும் என்று கருணாநிதி குரல் கொடுத்தபோது, ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக’ என்று சொன்னார். 2004-ம் ஆண்டு தீவுத்திடலில் நடந்த கூட்டத்தில் சோனியாகாந்தி குறித்து கருணாநிதி பேசும்போது, ‘இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க’ என்றார்.

இன்றைக்கு, இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நான் முன்மொழிகிறேன். நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம். புதிய இந்தியாவை உருவாக்குவோம். கருணாநிதியின் மகனாக தமிழகத்தில் இருந்து இப்போது ராகுல்காந்தி பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல்காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சியை தருக. பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்துவோம். ராகுல்காந்திக்கு அந்த வல்லமை இருக்கிறது. ராகுல்காந்தியின் கரங்களை அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்துவோம். நாட்டை காப்பாற்றுவோம், ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம் என்று உங்களுடன் சேர்ந்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நானும் உறுதி எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.