முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு


முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 7:05 AM GMT (Updated: 17 Dec 2018 7:05 AM GMT)

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை,

தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சிக்கிய ரகசிய டைரி மூலம் இந்த தகவல்கள் அம்பலமானது.

அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரம் தேதிவாரியாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டைரி தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வருமானவரித் துறை பரிந்துரை செய்தது. ஆனால் விசாரணை தாமதமானதால் சி.பி.ஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குட்கா ஊழல் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை வந்து கடந்த ஒருவாரமாக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. உதவியாளர் சரவணனிடம் 3 நாட்கள் விசாரணை நடந்து உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் 2 நாட்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர். குறிப்பாக அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது சி.பி.ஐ ஆவணங்கள் மற்றும் டைரி குறிப்புகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடந்தது.

 இந்த நிலையில் இன்று காலை திடீரென  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரை சந்தித்து பேசினார்.  இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story