ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம்; தமிழிசை சௌந்தரராஜன்


ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம்; தமிழிசை சௌந்தரராஜன்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:35 AM GMT (Updated: 17 Dec 2018 11:35 AM GMT)

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.

அதன்பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்
பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த பொது கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று சூளுரைத்தார்.

அவர் பேசும்பொழுது, இன்றைக்கு, இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நான் முன்மொழிகிறேன். நாம் டெல்லியில் புதிய பிரதமரை அமர வைப்போம். புதிய இந்தியாவை உருவாக்குவோம். கருணாநிதியின் மகனாக தமிழகத்தில் இருந்து இப்போது ராகுல்காந்தி பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல்காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சியை தருக. பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்துவோம். ராகுல்காந்திக்கு அந்த வல்லமை இருக்கிறது. ராகுல்காந்தியின் கரங்களை அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்துவோம்.

நாட்டை காப்பாற்றுவோம், ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம் என்று உங்களுடன் சேர்ந்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நானும் உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்பொழுது, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்ததை காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.  பிரதமர் மோடி மற்றும் அவருடைய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சதி திட்டம் செய்கிறது என்பதை வெளிப்படுத்த காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் 70 இடங்களில் செய்தியாளர் சந்திப்பை பா.ஜனதா நடத்துகிறது.

இந்நிலையில், இதுபற்றி தமிழிசை கூறும்பொழுது, ரஃபேல் விவகாரத்தில் காங்கிரசை எதிர்த்து எங்களது கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

Next Story