கட்சி விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் ஜெயக்குமார்


கட்சி விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 19 Dec 2018 1:20 PM GMT (Updated: 19 Dec 2018 1:20 PM GMT)

கட்சி விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

துணை முதல்வரும், அ.தி.மு.க.வின்  ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர மன்ற தலைவர்) கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும்,  கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்  நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கட்சி விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மற்றவர்களுக்கும் இது ஒரு முன்னுதாரணம்.

அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் கட்சி விரோத செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.  அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடலை பாடி அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து அவர், கஜா புயலால் இந்த வருடம் அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடாது.  கஜா புயல் நிவாரணத்தில் எந்த முறைகேடும் இல்லை.  புயல் வேகத்தில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நிவாரணம் வழங்கும்பொழுதும் தினகரன் டோக்கன் தந்துள்ளார்.  தமிழக அரசு மலையளவு நிதியை கேட்டுள்ள நிலையில், மத்திய அரசு எலுமிச்சை அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Next Story