அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Dec 2018 11:15 PM GMT (Updated: 19 Dec 2018 7:17 PM GMT)

முறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

முறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து இன்று பதில் அளிக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் வேலை செய்தவர் கீதா. இந்த ரேஷன் கடையில், கடந்த 2010-ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கத்தின் கூடுதல் பதிவாளர் திடீரென சோதனை நடத்தினார். அப்போது, அவர் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கீதாவை பணி நீக்கம் செய்து அவர் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை சிறப்பு அதிகாரியும் உறுதி செய்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கீதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து, உயர் அதிகாரிகள், ரேஷன் கடைகளில் திடீரென சோதனை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள் சிலரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

ஒழுங்கீனம் மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் உணவு பண்டங்கள், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது’ என்று நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்ட பின்னரும் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறைந்தபாடில்லை. ஊழியர்களின் ஒழுங்கீனமும், முறைகேடும் தொடரத்தான் செய்கின்றன. பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய பொருட்கள் எல்லாம், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், இதுகுறித்து விரிவான பதில் மனுவை இன்று (வியாழக்கிழமை) தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story