பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு எது தடையாக இருந்தாலும் அதை நீக்க அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் - ராஜேந்திர பாலாஜி


பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு எது தடையாக இருந்தாலும் அதை நீக்க அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் - ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 21 Dec 2018 8:47 AM GMT (Updated: 21 Dec 2018 8:47 AM GMT)

பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு எது தடையாக இருந்தாலும் அதை நீக்க அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகர்,

கடந்த தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தது. 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.

அதேபோல் பட்டாசு தயாரிப்பிலும் நிறைய புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. குறிப்பிட்ட சில மூலக்கூறுகளை பயன்படுத்த கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் சிவகாசி தொடங்கி தமிழகம் முழுக்க பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கடந்த 2 மாதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படவே இல்லை. இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இது பெரிய பொருளாதார இழப்பை உருவாக்கியது.

இதன் காரணமாக விருதுநகரில் தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் என பலர் இணைந்து  இன்று மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாசு உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு பெரிய அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பதற்றம் அதிகம் ஆகவே பட்டாசு தொழிலாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அளவிலான மாசுக்கட்டுப்பாடு வாரியமும் பட்டாசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அப்படி இருந்தும் உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு உத்தரவு வந்துள்ளது என்றால் அது நமது விதி என்று தான் கூற வேண்டும். அதற்கு மாற்று வழி செய்ய வேண்டும்.

பசுமை பட்டாசு தயார் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பசுமை பட்டாசு தயாரிப்பது எப்படி என்று விளக்கம் எங்களுக்குத் தரப்பட வேண்டுமென்று பட்டாசு தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காபி கொட்டை போடாமல் காபி எப்படி தயாரிக்க முடியும்? டீத்தூள் தயாரிக்காமல் டீ தயாரிக்க சொன்னால் எப்படி? இந்த தீர்ப்பை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது. எப்படி பிழைப்பது. இந்தியாவில் தானே விருதுநகர் மாவட்டம் உள்ளது. நாங்கள் டெல்லிக்கு சென்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளோம். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நமக்காக கடுமையாகப் பேசியுள்ளார்.

1000, 2000 ரூபாய் நோட்டுகளை பாக்கெட்டில் வைத்து பழக்கப்பட்டவர்கள் சிவகாசி மக்கள். இன்று, ஐந்து ரூபாய்க்கு வழி இன்றி தவிக்கிறார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதாக பெண்கள் கூறுகிறார்கள். இங்கே நான் ஒரு அமைச்சராக வரவில்லை. ஒரு மனிதனாக வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக வந்துள்ளேன், உங்களுக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் உங்களில் ஒருவனாக நின்று உங்களை பாதுகாப்பதற்கு நான் துணை நிற்பேன். நமது நோக்கம் மத்திய அரசுக்கு இப்பிரச்சினை தெரிய வேண்டும். ஊடகங்களுக்கு தெரிய வேண்டும். உலகத்திற்கு தெரிய வேண்டும்.

உலகத்தில் எங்குமே பட்டாசுக்கு தடை கிடையாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை கிடையாது. ஏன் இந்தியாவில் மட்டும் தடை விதிக்க வேண்டும்? அப்படியான சூழலை இந்தியாவில் ஏன் உருவாக்க வேண்டும்? இந்த தீர்ப்பை நீதிமன்றம் சொல்லி உள்ளது. எனவே சட்டரீதியாக இதை அணுக வேண்டும். தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெறும்.

நானும் கல்வி கற்கும் காலத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்துள்ளேன். நான் ஒரு பட்டாசு தொழிலாளி. பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு தீப்பெட்டி ஒட்டியுள்ளேன். தீப்பெட்டி தொழிலாளர் வேலை, பட்டாசு தொழில் வேலை என அத்தனை வேலைகளும் எனக்கு தெரியும். அவர்களின் துன்பங்களும் எனக்கு தெரியும். உங்களில் ஒருவனாக நான் கூறுகிறேன், இந்த பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு எது தடையாக இருந்தாலும் அதை நீக்க அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story