பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 8:10 PM GMT)

பொன் மாணிக்கவேல் மீதான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் நேற்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக மதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணைகள் கட்டுவதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமல் செயல்படுத்த கூடாது என்பதுதான் தீர்ப்பு, அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றுதான் தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.

சிலை தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவர் கீழ் பணியாற்றுகின்ற பல்வேறு நிலையில் உள்ள காவல்துறையினர், தங்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், பணியில் குறுக்கிடுவதாகவும், மேலும் வழக்கு விசாரணையில் தலையிடுவதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் மீது அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருக்கிறது. அவர் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. இன்னும் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படவில்லை, தான் நிரபராதி என்றால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும், தான் நியாயமானவர், நேர்மையானவர் என்றால் அதை பொன் மாணிக்கவேல் நிரூபித்து இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story