நோய்களை குணப்படுத்துமா கழுதைப் பால்? கூவி, கூவி விற்கும் பெண்மணி: ஒரு சங்கு ரூ.50


நோய்களை குணப்படுத்துமா கழுதைப் பால்? கூவி, கூவி விற்கும் பெண்மணி: ஒரு சங்கு ரூ.50
x
தினத்தந்தி 25 Dec 2018 11:12 AM GMT (Updated: 25 Dec 2018 11:52 AM GMT)

தஞ்சை மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரம்பலூர் பெண் ஒருவர் கூவி கூவி கழுதைப்பால் விற்பனைச் செய்து வருகிறார்.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, சத்து மிகுந்த தாயின் சீம்பாலை மறக்காமல் கொடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீம்பால் தருகின்றனரோ இல்லையோ, கழுதைப் பால் கொடுப்பதில், பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

'ஒரு சங்கு கொடுத்தால் போதும்; நோய் நொடியே அண்டாது' என, மருத்துவ நிபுணர்கள் போல், கழுதைப் பால் விற்பவர்கள் விளக்கம் தந்து, ஒரு சங்கு 50 ரூபாய், 100 ரூபாய் என இஷ்டத்திற்கு விலை வைத்து விற்கின்றனர். விவரம் தெரியாத பொதுமக்கள், 'குழந்தைகளுக்கு ரொம்ப நல்லதுங்க... என ஆர்வத்தில், வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். 

ஏதாவது கேட்டால், 'பாட்டன், பூட்டன் காலத்திலே இருந்து, கழுதைப் பால் கொடுக்கிறது வழக்கம் தானே... என கேட்கின்றனர் பெண்கள். 'கழுதைப் பால் பயன்பாடு பாரம்பரியமாக நம்மில் இருந்துள்ளது. வாத நோய், கரப்பான், சிரங்கு, பித்தம், சித்தபிரமை போக்கும் மருத்துவ குணம் இதற்கு உண்டு. அதை பச்சையாக கொடுப்பது சரியல்ல... என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ஒரு குழுவினர் சுற்றி உள்ள நகரங்களில் அடிக்கடி முகாமிட்டு கழுதைப்பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இது போல்  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கழுதைப்பால்  வியாபாரம் நடக்கத்தான் செய்கிறது. திருச்சி மண்ணச்சநல்லூரில் பெரம்பலூரை சேர்ந்த ஒரு பெண்மணி முகாமிட்டு கழுதைபால் விற்று வருகிறார்.

கழுதைப்பால் வாழ்வின் அமுதமாக இருக்க முடியும். பண்டை காலத்தில் பல்வேறு நோய்களுக்கும். வயது முதிர்ச்சி தெரியாமல் இருக்க தோல் டானிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளது. முதல் முதலாக  கழுதைப்பாலை கிரேக்க மருத்துவரான ஹிப்போக்ரேட்டஸ் பயன்படுத்தி உள்ளார். அவர் கழுதைப்பாலை  கல்லீரல் பிரச்சினைகள், காய்ச்சல், தொற்று நோய்கள், நச்சு, மூட்டு வலிகள் போன்றவற்றிற்கு பரிந்துரைத்து உள்ளார்.

கழுதைப் பால் கொடுத்தால், குரல் வளம் நன்றாக இருக்கும், மஞ்சள் காமாலை வராது, தொற்று நோய்களும் அண்டாது என, காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கையே இதற்கு காரணம். மக்களின் நம்பிக்கை சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே நடக்கிறது என்றால், கிராமப்புறங்களில் கேட்கவே வேண்டாம்.

கழுதைப்பால் சுத்தப்படுத்தப்பட்டு ஏராளமான  அழகுசாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

போப் பிரான்சிஸ் தனது தாயார் தனக்கு அர்ஜெண்டினாவில் தாய்ப்பால் போக,  துணை உணவாக கழுதைப்பால் கொடுத்ததாக கூறி உள்ளார்.

கிளியோபாட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப் பாலில் குளித்ததாகச் சொல்வார்கள். உண்மைதான். அதற்குச் சான்றுகளும் இருக்கின்றன. அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீலமலர்களைப் போன்றது. சாக்லெட் நிறம் என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி. உடல் நிறத்தை வெண்மையாக மாற்ற வித்தியாசமான குளியலைத் தேடினார். 

அவர் தேடிப் பிடித்த சித்தவகைக் குளியல்தான் இந்தக் கழுதைப்பால் குளியல். ஆக கழுதைப்பாலில் குளித்தால் உடல் மினுமினுக்கும், தோல் ஜொலி ஜொலிக்கும் என்று அவர் நம்பினார். கிளியோபாட்ரா தினமும் 700-க்கும் மேற்பட்ட கழுதைகளிடம் இருந்து பெறப்பட்ட பாலில்  குளித்து வந்து உள்ளார். கழுதைப்பால் முக சுருக்கங்களை போக்குகிறது. மேலும் தோலை மென்மையடைய செய்கிறது.  இதனால்  அதில் குளிக்க அவர் ஆர்வம் மிக்கவராக இருந்து உள்ளார். இது ரோம பேரரசில்  அனைவருக்கும் தெரிந்து உள்ளது.

19-வது நூற்றாண்டில்  லண்டனில் பரவலாக  மாட்டுப்பாலுக்கு பதில் கழுதைப்பால் விற்பனை நடைபெற்று உள்ளது. தற்போது பெரும்பாலான மக்கள் ஒவ்வாமையால்  மாட்டுப்பால் பொருட்களை தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதில்  கழுதைப்பால்,  ஆட்டுப்பால், செம்மறி ஆட்டுப்பால் மற்றும் ஒட்டகப்பாலை பயன்படுத்துகின்றனர். கழுதைப்பால் லாக்டோஸ் நிறைந்தது.  மேலும் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. 

தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு,  பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள்.  மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி) கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காக கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன.

கழுதைப்பால் குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழக பால் அறிவியல் விரிவுரையாளர் டாக்டர் பொட்டிஸ் பபடெமஸ் கூறியதாவது:-

கழுதைப்பால் தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் குடித்து வந்தால் உங்களுக்குள்  ஒரு மாற்றம் ஏற்படுவதை காணலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆஸ்துமா,  இருமல்,  படை மற்றும் தடிப்புகள்  மாறி விடும்.

பால் சிகிச்சை பண்புகள் அறிவியலுக்கு புதிரானதாக தோன்றுகிறது. மனிதர்களைப்போல கழுதைகளுக்கு ஒரு வயிறு உள்ளது. பால் கொடுக்கும் மாடு மற்றும் ஆடு போன்ற விலங்கினங்களுக்கு பல வயிறுகள் உள்ளன. இதனால் சிக்கலான நொதித்தல் மூலம் உணவை சீரணிக்க பாக்ட்ரீயா நிறைய தேவைபடுகிறது. 

தாய்ப்பாலைபோல கழுதைப்பால்  சுத்தமானது அல்ல ஆனால் பாதுகாப்பு எதிர்ப்பு பாக்டீரியா கொண்டு உள்ளது.  இது பசுவின் பாலை விட 200 மடங்கு செயல்திறன்  கொண்டது. ஆனால் கழுதைபாலில் குறிப்பாக  கிருமிகள் உள்ளது.  விஞ்ஞானி என்ற வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சைப்ரசில் கழுதைப்பால் மிகவும் மலிவானது அல்ல. இங்கு  ஒரு லிட்டர் இந்திய பணத்தில் ரூ.891-க்கு விற்பனையாகிறது. இதுவே ஐரோப்பாவில்  இருமடங்காகிறது. மேலும் பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி,  ஸ்பெயின், ஹாலந்து, செர்பியா மற்றும் போன்சி உள்பட  லத்தின் அமெரிக்க நாடுகளில் அதிக அளவு கழுதைபால் உற்பத்தி செய்யப்படுகிறது. 

Next Story