அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.வை கொச்சைப்படுத்துவதா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, துரைமுருகன் கண்டனம்


அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.வை கொச்சைப்படுத்துவதா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, துரைமுருகன் கண்டனம்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:38 PM GMT (Updated: 26 Dec 2018 11:38 PM GMT)

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக முல்லை பெரியாறு விஷயத்தில் தி.மு.க.வை கொச்சைப்படுத்துவது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொஞ்சம் கூட அழகல்ல என்று துரைமுருகன் கூறினார்.

சென்னை,

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு வரலாறே தெரியாத மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாங்க புதுசா கட்டிக்கின ஜோடிதானுங்கோ என்பது போல் ஊழலின் உறைவிடமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.விற்கு வக்காலத்து வாங்குவதற்காக தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று அபாண்டமாக பழி சுமத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 132 வருட முல்லைபெரியாறு வரலாறு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் சாதனையை சிறுமைப்படுத்துவது போல் மத்திய மந்திரி பேசுவதை தி.மு.க. தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மந்திரி நினைப்பது போல் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமில்லாத ஆடும் பாலத்தை அமைத்துவிட்டு, நள்ளிரவில் பொறியாளர்களை விட்டு சரி செய்யும் பிரச்சினை அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 ஆக குறைத்தது 1979-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி என்பது கிளிப்பிள்ளைக்குக்கூட தெரியும். ஆனால் முல்லை பெரியாறின் கிழக்கும் மேற்கும் தெரியாமல் பேசும் மத்திய மந்திரிக்கு புரிந்திருக்காமல் இருக்கலாம். 1989-ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தி உத்தரவிட்டவர் கருணாநிதி என்ற அடிப்படை உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஊழல் மகாசமுத்திரமாக காட்சியளிக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.வை கொச்சைப்படுத்துவது மத்திய மந்திரிக்கு கொஞ்சம் கூட அழகல்ல.

இப்போது கூட அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்காக டெல்லி சென்ற எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியாகாந்தியிடமும், ராகுல்காந்தியிடமும் மேகதாது பிரச்சினை பற்றி எடுத்து கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடமும் மேகதாது பிரச்சினை பற்றி பேசி வலியுறுத்தியிருக்கிறார். இது எதையுமே அறிந்தும் அறியாதவர் போல் மத்திய மந்திரி பேசியிருப்பது அவருக்கு எங்கிருந்தோ அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசு என்று வந்த கட்டளை என்றே தெரிகிறது.

காவிரியில் நடை பயணம் மேற்கொண்டு காவிரி வரைவு திட்டத்தை அமைக்க பாடுபட்டவர் எங்கள் தலைவர். முல்லைப் பெரியாறு, மேகதாது அணை எதுவாக இருந்தாலும் முன்னணியில் நின்று தமிழகத்திற்காக, தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பவர் எங்கள் தலைவர். ஆகவே இதையெல்லாம் மறைத்துப் பேசினால் தமிழக மக்கள் தங்களை நம்பி விடுவார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நினைத்தால் அது அவர் கானும் பகல் கனவாகவே முடியும் என்றும், காவிரியிலும், மேகதாது அணையிலும் தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள துரோகத்தை ஒரு போதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story