கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் அளித்த விவகாரம்; விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு


கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் அளித்த விவகாரம்; விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:05 AM GMT (Updated: 30 Dec 2018 4:05 AM GMT)

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. ரத்தம் அளித்த இளைஞர் மனஉளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்து உள்ளார்.  அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.  எலி மருந்து குடித்திருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மனநல சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

அவர் இன்று காலை வழக்கம் போல் இருந்த நிலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.  இதில், உரிய சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையின் டீன் தெரிவித்து உள்ளார்.

Next Story