“2019” புத்தாண்டு பிறந்தது - ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்


“2019” புத்தாண்டு பிறந்தது - ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2019 12:00 AM IST (Updated: 31 Dec 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்தது. அனைவரும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சென்னை,

ஓவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல்நாள் ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 01.01.2019 ம் நாள் இன்று நள்ளிரவு பிறந்தது. வான வேடிக்கைகள், இசைக்கருவிகள் மற்றும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

உலகம் முழுவதும் 2019ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. சென்னையில் நேற்று இரவிலிருந்தே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியது.  இதில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஸ்டார் ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். ஒருவொருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை நேரிலும், போனில் தொடர்பு கொண்டும், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாக்ராம் மூலமாகவும் பரிமாறிக் கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது  அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  

சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து,  ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, குற்ற ஆவண காப்பகத்தில், குற்றம் செய்தவரின் தகவல்கள் சேகரிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

சென்னையில் உள்ள 100 முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில், மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், மணலில் செல்லக் கூடிய கண்காணிப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றும், காவல்துறை உதவி மையக் கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும், சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


Next Story