சென்னையில் புத்தாண்டு விபத்துகளில் 7 பேர் பரிதாப சாவு; 234 பேர் காயம் 63 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
சென்னையில் புத்தாண்டு விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
சென்னை,
சென்னையில் புத்தாண்டு விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் கூடினார்கள். இதை முன்னிட்டு, தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா கொண்டாட்டங்களை உறுதிசெய்வதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் மேற்பார்வையில், சுமார் 2 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து சீராக செல்வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதன்படி சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும், இருசக்கர வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை தடுக்கவும் 1,022 இடங்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட இரும்பு தடுப்புகள் சாலைகளில் அமைக்கப்பட்டது. 162 இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. 241 முக்கிய சந்திப்புகளிலும் ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 97 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
போதையில் வாகனம் ஓட்டியவர்கள்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 263 பேர் மீது வழக்குப்போடப்பட்டது. இருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தவர்கள் மீது 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீது 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
57 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 10 உயிரிழப்பு விபத்துகள் மற்றும் 31 பிற விபத்துக்கள் என மொத்தம் 41 விபத்துகள் ஏற்பட்டது. சென்ற 2018-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் 8 உயிரிழப்பு விபத்துகள் மற்றும் 16 பிற விபத்துகள் என மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
7 பேர் சாவு
இந்த ஆண்டு வளசரவாக்கத்தில் சினிமா துணை நடிகரான நாசர்கான் (வயது 20), தனது நண்பர் ஜெய்சுதனுடன்(19) புத்தாண்டு கொண்டாட மோட்டார் சைக்கிளில் சென்றார். கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது மாநகர பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஜெய்சுதன் பலியானார்.
அடையாறு மத்திய கைலாஷ் அருகே ஸ்ரீகாந்த் பாரி (24) என்ற வாலிபர் குடிபோதையில் நண்பருடன் காரை ஓட்டிச்சென்றபோது அவரது கார் சரக்கு வேன் ஒன்றின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் இருந்த பாஸ்கர்(51) உயிர் இழந்தார். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களான புருஷோத்தமன்(20), வினோத்குமார்(22) ஆகிய இருவரும் வேளச்சேரி 100 அடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
கொரட்டூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல்(22) புத்தாண்டு இரவில் கொண்டாடிவிட்டு குடிபோதையில் அண்ணா நகருக்கு இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றார். அப்போது அவருடைய வாகனம் தடுப்புச் சுவரில் மோதி அவர் பலியானார். இதேபோல் தண்டையார்பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்த அபிலேஷ்(29) மோட்டார் சைக்கிளில் சென்றபோது தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தார்.
இது தவிர மேலும் ஒருவர் விபத்தில் உயிர் இழந்தார். இது தொடர்பாக மொத்தம் 19 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஓட்டுனர் உரிமம் ரத்து
குடிபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகளில் சிக்கியவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அந்தவகையில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 263 பேரின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
234 பேர் காயம்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் நடந்த சாலை விபத்துகளில் 234 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 30 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 68 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 92 பேரும் நேற்று விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story