கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 3 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் உரை ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கவர்னர் உரை ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

பொங்கல் பரிசு திட்டம், அத்திக்கடவு–அவினாசி திட்டம், அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்பது உள்பட கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. அதே சமயத்தில் தமிழகத்திலும் வேளாண் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெறவேண்டும்.

வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அளித்த செயல்திட்ட ஆய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு கண்டனம் தெரிவித்து இருக்கவேண்டும். கவர்னர் உரை மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக தந்திருக்கிறது. மக்கள் நலனில் அக்கரையற்ற மாநில உரிமைகளை நசுக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயலற்ற தன்மையையே கவர்னர் உரை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது.

ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்)

‘கஜா’ புயல் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கவர்னர் உரை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. வறுமையை ஒழிப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு இல்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கான என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு இல்லை. மேலும் பல்வேறு முக்கிய அம்சங்கள் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை.

ரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர்)

பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிர் கொடுப்பது குறித்து கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடவில்லை. மாநில நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ள மத்திய அரசின் வஞ்சனை போக்கை வெளிப்படையாக கூறத் தயங்குகிறது. மக்களின் உணர்வை பிரதிபலிக்காத உப்பு, சப்பு இல்லாத வெற்று உரையாக கவர்னர் உரை அமைந்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர்)

செயலற்ற அரசின் தொகுப்பாகவும், பம்மாத்து மற்றும் பகட்டு வார்த்தைகள் நிறைந்ததாகவும் கவர்னரின் உரை உள்ளது. நொறுங்கி கிடக்கும் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதாக இல்லை. கவர்னரே பல புகார்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் அவருடைய உரை மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தாது.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்)

‘கஜா’ புயலால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். சென்னை, மதுரை, கோவையில் மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு தமிழக அரசின் கருத்தை கேட்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளன. எனவே கவர்னர் உரையை வரவேற்கிறேன்.


Next Story