சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருப்பதால் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தமிழக அரசு கடிதம்


சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருப்பதால் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது  ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தமிழக அரசு கடிதம்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்று அந்த ஆலைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்று அந்த ஆலைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சீல் வைக்க உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடினர். இந்த நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுத்தது. மின்சார இணைப்பை துண்டித்ததோடு, அந்த ஆலைக்கு சீல் வைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ததோடு, ஆலையைத் திறக்கவும் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 15–ந் தேதி உத்தரவிட்டது.

ஆலையின் கடிதம்

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆலையை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி டிசம்பர் 17–ந் தேதி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை கடிதம் எழுதியது.

இந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள வேதாந்தா காப்பர் கம்பெனியின் (ஸ்டெர்லைட் ஆலை) அசோசியேட் துணைத் தலைவருக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் (முழு கூடுதல் பொறுப்பு) ‌ஷம்பு கல்லோலிகர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பரிசீலிக்க முடியாது

நீர் மற்றும் காற்றுச் சட்டம், அபாயகரமான கழிவுகள் விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஆலைக்கான அனுமதியை புதுப்பிக்கவும், ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், நிறுத்தப்பட்டு இருந்த மின்சார இணைப்பை மீண்டும் வழங்கவும், ஆலையை அவசரகால பராமரிப்பு செய்வதற்காக உடனடியாக அங்கு செல்ல வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் கடந்த டிசம்பர் 17–ந் தேதி கடிதம் எழுதி இருந்தீர்கள்.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் கடந்த டிசம்பர் 15–ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 2–ந் தேதியன்று (நேற்று) தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அப்பீல் தாக்கல் செய்துள்ளது.

எனவே பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தை திறப்பது தொடர்பாக நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story