சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம்: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சபாநாயகருக்கு நன்றி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தெரிவித்தார்


சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம்: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சபாநாயகருக்கு நன்றி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தெரிவித்தார்
x
தினத்தந்தி 3 Jan 2019 11:30 PM GMT (Updated: 3 Jan 2019 7:59 PM GMT)

தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நன்றி கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் ஆண்டாண்டு காலமாக ஒன்றுக்கு ஒன்று எதிரிடையாக இயங்கி வருகின்றன. இரண்டு கட்சிகளின் மோதலையும் தமிழக சட்டசபை வெகு காலமாகக் கண்டு வருகிறது.

இந்தநிலையில், தி.மு.க. கட்சித் தலைவராக இருந்து, மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியை சட்டசபையில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பாராட்டியது, நடுநிலையாளர்களை மட்டுமல்ல, தி.மு.க.வினரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஏனென்றால், கருணாநிதியை ‘கலைஞர்’ என்று சபாநாயகர் ப.தனபால், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் பேச்சில் பலமுறை குறிப்பிட்டு உரையாற்றினார்கள்.

கருணாநிதியின் மறைவை நினைவுகூர்வது தி.மு.க.வினருக்கு மீண்டும் சோகத்தை ஏற்படுத்தினாலும், எதிரணியினரே அவரை புகழ்ந்து உரையாற்றியது தி.மு.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இரங்கல் தீர்மானம் நிறைவேறியதும், சபாநாயகர் ப.தனபால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவையை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 பேரையும் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார். கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி கூறுவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினுடன், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் உடன் சென்றனர்.

Next Story