ஏழைகள் முன்னேறி விட்டால் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


ஏழைகள் முன்னேறி விட்டால் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Jan 2019 8:25 PM GMT (Updated: 3 Jan 2019 8:25 PM GMT)

நிலமற்ற ஏழைகள் பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டால், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த குமார். இவரது தந்தை விவசாயம் செய்ய அரசிடம் நிலம் கேட்டு விண்ணப்பம் செய்தார். இதன்படி, அரக்கோணம் தாலுகாவில் உள்ள தண்டலம் கிராமத்தில், இரு பிரிவுகளாக நிலத்தை 1993-ம் ஆண்டு அரசு வழங்கியது. பின்னர் அவரது தந்தை மறைவுக்கு பின்னர், அந்த நிலத்தை குமார் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், விவசாயத்துக்காக கொடுத்த நிலத்தில், கட்டிடம் கட்டி தொழில் பயிற்சி மையம் நடத்துவதாக குமாருக்கு எதிராக அரசுக்கு புகார் வந்தது. இதனடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டு, நிலத்தை வணிக ரீதியான பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதால், இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை அரசிடம் ஒப்படைக்கும்படி 2005-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து குமார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன், அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த 2 வழக்குகளையும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு கொடுத்த தரிசு நிலத்தை தன் தந்தை கடுமையாக உழைத்து, விளை நிலமாக மாற்றியதாக மனுதாரர் குமார் கூறியுள்ளார். அதேநேரம், அந்த நிலத்தில் அவர் தொழில் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். வணிக ரீதியாக நிலத்தை பயன்படுத்தி வருவதால், அந்த நிலத்தை திருப்பி எடுத்துக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

அந்த நிலம் தனக்கு வேண்டும் என்றும், அந்த நிலத்துக்குரிய தொகையை தந்துவிடுவதாக கலெக்டரிடம், மனுதாரர் விண்ணப்பம் செய்துள்ளார்.

இதை பார்க்கும்போது, நிலத்தை வாங்கும் அளவுக்கு மனுதாரர் வசதி படைத்தவராகி விட்டார். இனி அவர் நிலமற்ற ஏழை என்ற பிரிவின் கீழ் வரமுடியாது. மாநிலம் முழுவதும் நிலமற்ற, வீடு இல்லாத ஏழைகளுக்குத்தான் இலவச நிலம், வீடு வழங்க வேண்டும். அந்த நிலத்தை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்திலும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறவேண்டும் என்பதற்காக தான் இந்த உதவிகளை அரசு செய்கிறது. அவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தின் மூலம் பொருளாதார ரீதியில் அவர்கள் அல்லது அவர்களது வாரிசுகள் முன்னேறிவிட்டால், அதன் பின்னர் அந்த நிலத்தை திரும்ப பெறவேண்டும்.

எனவே, இலவச நிலம் வழங்கிய நலத்திட்டத்தை அரசு உரியகால இடைவெளியில் அரசு மறு ஆய்வு செய்யவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் இருந்து பெற்ற இலவச நிலத்தை பயன்படுத்தி, தற்போது நிலத்தை வாங்கியவர்களின் வாரிசுகள் செல்வச் செழிப்பாக ஒரு பக்கம் வாழ்கின்றனர். மறுபக்கம், சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது.

எனவே, இலவசமாக நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்ததை திருப்பி எடுக்க அரசு முன்வரவேண்டும். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர், தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த நிலங்களை பெற்றவர்கள், அவர்களது வாரிசுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டனரா? என்பதை கண்டறிய வேண்டும். அந்த நிலங்களின் தற்போதைய நிலை என்ன? என்பதையும் ஆய்வு செய்து, நிலத்தை திரும்ப பெறுவது குறித்து தகுந்த முடிவுகளை சட்டப்படி எடுக்கவேண்டும்.

இதற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளின் குழுக்களை அமைக்க வேண்டும். இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், 8 வாரத்துக்குள் வருவாய் துறை முதன்மை செயலாளர் அனுப்ப வேண்டும். ஒருவேளை இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் செயல்படவில்லை என்றால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story