திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது - மு.க. ஸ்டாலின்


திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Jan 2019 5:14 AM GMT (Updated: 7 Jan 2019 5:14 AM GMT)

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைய இருந்தது. 

இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் அ.தி.மு.க. இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து  திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. உடனடியாக இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அனைத்துக்கட்சிகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் நிவாரண பணிகள் தடைப்பட கூடாது என்பதே திமுகவின் கருத்து.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story