சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை; நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகார்


சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை; நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகார்
x
தினத்தந்தி 7 Jan 2019 1:46 PM GMT (Updated: 7 Jan 2019 1:46 PM GMT)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை என நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகாராக தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த மாதம் (நவம்பர்) 30–ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வு பெறும் பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்திருந்தனர்.  அவர்கள் தங்களை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் திட்டியும், மிரட்டியும் வருகிறார் என புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிப்பதற்கு என்று தனியாக அலுவலகம் இல்லை.  இதனால் நடுத்தெருவில் நிற்கிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் புகாராக தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று வழக்கு விசாரணைக்கு கூட வராமல் டி.எஸ்.பி. குமார் ஊடகங்களில் பேட்டி அளித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு செயல்படுகிறது.  இதனால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.  தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதன்பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 9ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story