நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; உயர்கல்வி துறை செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; உயர்கல்வி துறை செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
x
தினத்தந்தி 8 Jan 2019 10:39 AM GMT (Updated: 8 Jan 2019 10:41 AM GMT)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வி துறை செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை,

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூர கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.

இதனால் வழக்கில் ஆஜராகாத உயர்கல்வி துறை செயலாளரை கைது செய்யும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.  அவரை ஜனவரி 9ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய உயர்கல்வி துறை செயலாளர் நேற்று நேரில் ஆஜராகாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இதனை அடுத்து அவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டு திரும்ப பெறப்பட்டது.  விசாரணைக்காக அடுத்த முறை ஆஜராவதில் இருந்தும் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை முழுமையாக செயல்படுத்தினாலே கல்வியின் தரம் வளரும் என கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் அனுமதி மறுத்த பின்பும் அனுமதி வழங்கியது ஏன்? என யு.ஜி.சி.க்கு கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள், தொலைதூர கல்வி மையம் தொடங்க அனுமதி வழங்கிய சிண்டிகேட் குழு முடிவை அறிக்கையாக அனுப்ப ஆணை பிறப்பித்து உள்ளனர்.

Next Story