விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் -சென்னை ஐகோர்ட்


விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் -சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:11 AM GMT (Updated: 9 Jan 2019 11:16 AM GMT)

விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னை

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்

இதனையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் ஐகோர்ட்டில்  பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சுப்ரீம் கோர்ட்  தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்தச் சட்டத்தை மீறி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்  நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசசாயி முன்னிலையில்  நடைபெற்றது. அப்போது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் எம்ஜிஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு அமைத்துள்ளோம். எனவே நினைவு வளைவு திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில்  அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்? ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர் காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கெனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா? இதுபோன்ற எந்த திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டு வாருங்கள். அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம். என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் அந்த நினைவு வளைவை பார்த்தால் எம்.ஜி.ஆர் பற்றிய நல்ல நினைவுகள் வருமென அரசு நினைப்பதில் என்ன தவறிருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர், அண்ணா நினைவாக நூலகம் கட்டியுள்ளார்கள். அதுபோல கட்டலாம். கல்வி, அறிவுத்திறன் வளர்ச்சிக்கு செலவிடலாம் என தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதிகள், சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்?? அதுகூட நீர்நிலை இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அத்துடன் விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story