பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு


பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:50 AM GMT (Updated: 10 Jan 2019 10:50 AM GMT)

பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

சென்னை

பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்,  வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில்  தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Next Story