மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது நிறுத்தம் ஊழியர்களிடம் வாக்குவாதம் + "||" + Provided parking Rs 1,000 Argue with employees

ரேஷன் கடைகளில் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது நிறுத்தம் ஊழியர்களிடம் வாக்குவாதம்

ரேஷன் கடைகளில் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது நிறுத்தம் ஊழியர்களிடம் வாக்குவாதம்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்குவது நிறுத்தப்பட்டது.
சென்னை, 

ஐகோர்ட்டு உத்தரவுப்படி வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்குவது நிறுத்தப்பட்டது. ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலோ சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, கடந்த 7-ந் தேதி முதல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வந்தனர். இதை எதிர்த்து நேற்று முன்தினம் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும், வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை மட்டும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்

ஐகோர்ட்டு உத்தரவிட்டபோதிலும் நேற்று முன்தினம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பையுடன், ரூ.1000 வழங்கப்பட்டது. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டபோது ‘அரசிடம் இருந்து எங்களுக்கு இன்னும் முறையான அறிவிப்பு வராததால் இதனை வழங்கி வருகிறோம்’ என தெரிவித்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளாக நேற்று காலையில் பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. அதை பெறுவதற்கு நேற்றும் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றுமாறு கூட்டுறவு சார் பதிவாளர், இணை பதிவாளர், உதவி ஆணையர் ஆகியோர் நேற்று ரேஷன் கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளித்ததாக, கடை ஊழியர்கள் கூறினர். இதனால் நேற்று வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது நிறுத்தப்பட்டது.

ஆனால் அவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழக்கம்போல் கொடுக்கப்பட்டன. ஆனாலும் சில கடைகளில் அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறி, பிற்பகல் வரை ஆயிரம் ரூபாய் பணத்தை வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கினார்கள்.

ஆனால் பிற்பகலுக்கு மேல் பில்லிங் மெஷினில் உள்ள மென்பொருளில் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான பிரிவு அரசு தரப்பில் அகற்றப்பட்டது. அதன்பிறகு ரூ.1,000 வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் ரேஷன் கடைகளுக்கு வந்த வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘கடைசி நேரத்தில் எதற்கு இந்த பாகுபாடு பார்க்க வேண்டும்? அப்படி என்றால், ஏற்கனவே எங்களை போல் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கிய ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்பி வாங்குங்கள்’ என்று ஆதங்கத்தில் வசைபாடினார்கள்.

ஏற்கனவே பணம் வாங்கியவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாயை திரும்ப பெற முடியுமா? என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

ஐகோர்ட்டு தெரிவித்தபடி ஒரு கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 54 குடும்ப அட்டைதாரர்கள்(வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) தான் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு பொருட்களை பெற தகுதியானவர்கள். மற்றவர்களுக்கு(வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்கள்) ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது. ஆனால் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பெற்றுவிட்டனர்.

அவர்களிடம் இருந்து மீண்டும் எப்படி பெற முடியும்? அதுதொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் எங்களுக்கு வரவில்லை. அதை அரசு தான் முடிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை