பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் மக்களை திரட்டி போராட்டம் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் மக்களை திரட்டி போராட்டம் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2019 10:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:15 PM GMT)

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காவிட்டால் மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவிரி பாசன மாவடடங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஏற்கனவே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 471.19 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டம் எந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் என்பது இப்போது வரை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மீண்டும், மீண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்துவதற்காக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தையும், விரைவில் அறிவிக்கப்படவுள்ள இரு திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story