ஒரே நாளில் வெளியானது பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு திரண்ட ரசிகர்கள் பேனர்கள் கிழிப்பு: போலீஸ் தடியடி


ஒரே நாளில் வெளியானது பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு திரண்ட ரசிகர்கள் பேனர்கள் கிழிப்பு: போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 10 Jan 2019 10:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:35 PM GMT)

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் நேற்று வெளியானது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். போலீஸ் தடியடியும் நடந்தது.

சென்னை,

ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 2 படங்களும் திரையிடப்பட்டன. அனைத்து தியேட்டர்களும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தியேட்டர்கள் முன்னால் ரஜினி, அஜித் ரசிகர்கள் கொடி தோரணங்கள் கட்டி இருந்தனர். கட் அவுட்டுகள் வைத்து பால் அபிஷேகம் செய்தார்கள். பட்டாசுகளும் வெடித்தனர். சில தியேட்டர்களில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. காலை, பகல், மாலை காட்சிகளுக்கு அனைத்து தியேட்டர்கள் முன்பும் திருவிழா கூட்டம்போல் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.

தமிழகம் முழுவதும் பேட்ட, விஸ்வாசம் படங்களை திரையிட்ட தியேட்டர்கள் முன்னால் போக்குவரத்து நெரிசல், போலீஸ் தடியடி சம்பவங்கள் நடந்தன. ரஜினி, அஜித் ரசிகர்கள் இடையே மோதலும் ஏற்பட்டன. சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் திரையிடப்பட்டன. அங்கு அதிகாலை சிறப்பு காட்சியாக பேட்ட படத்தை திரையிட்டனர். விஸ்வாசம் படத்தை திரையிடாமல் தாமதம் செய்வதாக அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. ரஜினி பேனர்கள் கிழிக்கப்பட்டன. போலீசார் சமரசப்படுத்தினார்கள். காலை 7 மணிக்கு விஸ்வாசம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதே தியேட்டரில் நடிகர் தனுஷ், நடிகை திரிஷா ஆகியோர் பேட்ட படத்தை பார்த்தனர். அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.

படப்பையை சேர்ந்த ரஜினி ரசிகர் அன்பரசு பேட்ட படம் வெளியாகும் தியேட்டரில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து மணமகள் காமாட்சியை சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு அழைத்து வந்தார். அங்கு படம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு புரோகிதர் மந்திரம் ஓத மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். மணமக்கள் குடும்பத்தினர் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு உணவு வழங்கினார்கள். இதே தியேட்டரில் விஸ்வாசம் படம் பார்க்க அஜித் ரசிகர்களும் திரண்டனர்.

எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டினார்கள். இதே தியேட்டரில் விஸ்வாசம் படமும் வெளியானதால் ஏராளமான அஜித் ரசிகர்களும் திரண்டனர். போட்டி போட்டு கட்அவுட், பேனர்களும் வைத்து இருந்தார்கள். தஞ்சை சாந்தி தியேட்டரிலும் ரஜினி ரசிகர் ஒருவரின் திருமணம் நடந்தது.

மதுரை சினிபிரியா திரையரங்கு முன்னால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நெல்லை தியேட்டர்களில் ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். படம் பார்க்க வந்தவர்களுக்கு பொங்கல் வழங்கினார்கள்.

அங்குள்ள ஒரு தியேட்டரில் அஜித் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். தியேட்டர் காம்பவுண்ட் சுவர் ஏறி சிலர் குதித்தனர். இதனால் அவர்கள் மீது போலீஸ் தடியடி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் பேட்ட, விஸ்வாசம் படம் திரையிட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் பேட்ட படம் தாமதமாக திரையிடப்பட்டது. ஆனால் முன்கூட்டியே விஸ்வாசம் திரையிடப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். இதற்கிடையே ரஜினியின் பேனர் கிழிக்கப்பட்டது. 2 படங்களுக்கும் டிக்கெட் கிடைக்காதவர்கள் அங்கிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்தனர். இதனால் போலீஸ் தடியடி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தியேட்டரில் அஜித் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தபோது அது சரிந்து விழுந்து 6 ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர்.

வேலூரில் விஸ்வாசம் திரையிடப்பட்ட தியேட்டரில் ‘சீட்’ பிடிக்க நடந்த தகராறில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அஜித் ரசிகர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேட்ட படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர் சரவணன் (வயது 40) என்பவர் மீது பட்டாசு விழுந்ததில், அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.

Next Story